தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1050 விரிவுரையாளர்கள் பணியிடங்கள் காலியாக இருந்தன.
அதை நிரப்ப சென்னையில் உள்ள டி பி ஐ ல் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தியது.
அதில் தமிழ் தெரியாத வேற்று மாநில விரிவுரையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தேர்வாகி இருப்பது தாமதமாக தெரிய வந்திருக்கிறது.
ஏற்கெனெவே தமிழகத்தில் மத்திய அரசு பணிகளில் வேற்று மாநிலத்தவர்தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
இது எப்படி சாத்தியமானது? தமிழ் தெரியாதவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை விதித்து இதை சாத்தியமாக்கி இருக்கிறார்கள்.
இப்படி ஒரு விதி விலக்கு மற்ற மாநிலங்களில் இருக்கிறதா?
மற்ற மாநிலங்களில் இது போன்று அந்த மாநில நிறுவனங்களில் வேற்று மாநிலத்தவர் தேர்வு எழுதி அந்த மாநில மொழியை இரண்டு ஆண்டுகளுக்குள் கற்று கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் வேலையில் சேர முடியுமா?
அப்படி இல்லாத பட்சத்தில் தமிழகத்தில் மட்டும் இந்த விதி விலக்கை கொண்டு வந்ததற்கு யார் காரணம்?
ஏற்கெனெவே தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகள் ஆயிரக்கணக்கில் இருக்கும் போது இருக்கின்ற வேலை வாய்ப்பையும் வேற்று மாநிலத்தவர் களுக்கு தாரை வார்க்கும் சதி நடந்திருப்பது இன்றைய ஆட்சியாளர் களுக்கு தெரிந்து நடந்ததா? தெரியாமல் நடந்ததா? அல்லது அதைப்பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலை இல்லையா?
உடனடியாக வெளி மாநிலத்தவர் நியமனங்களை ரத்து செய்து விட்டு தமிழகத்தில் தமிழ் தெரிந்தவர்களுக்கே அந்த வேலை வாய்ப்பை வழங்க வேண்டும்.
அதற்கு வழி செய்த அந்த விதி முறையை ரத்து செய்ய வேண்டும்.
இதற்கெல்லாம் கூட விழிப்புணர்வுடன் போராட வேண்டி இருக்கிறதே?
போராடுபவர்களையும் கைது செய்ய மட்டும் ஆட்சியாளர்கள் தவறுவது இல்லை.