சேலத்தில் நீட் தேர்வை எதிர்த்து நோட்டீஸ் விநியோகித்ததாக தினகரன் ஆதரவாளர்கள் மீது
வழக்குப் பதிவு செய்யப் பட்டு மூன்று பேர் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள்.
நோட்டீஸில்கண்டது வன்முறையை தூண்டியதாக இருந்தால் நியாயப்படுத்தலாம். ஆனால் மத்திய பா ஜ க
அரசின் வஞ்சகத்தையும் மாநில அரசின் கையால் ஆகாத்தனத்தையும் மக்கள் மத்தியில் பரப்பினால்
எப்படி குற்றம் ஆகும்?
ஏற்கெனெவே நீட் தேர்வை கண்டித்து பொது கூட்டம் கூட்ட தடை போட்ட திருச்சி காவல் துறையின் உத்தரவை
நீதிமன்றம் மூலம் தகர்த்து கூட்டம் நடத்தினார்கl.
ஆக அரசை விமர்சித்து பொதுக்கூட்டம் போடக்கூட நீதிமன்றம் தலையிட்டு அனுமதி வழங்க வேண்டிய
அவல நிலை தமிழகத்தில் நிலவுகிறது.
மே பதினேழு இயக்க திருமுருகன் மத்திய பா ஜ க அரசை விமர்சிக்கிறார் என்பதற்காகவே அவர் மீது
காவல் துறை வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது. குண்டர் சட்டம் பாய்கிறது . நீதிமன்றம் உடைக்கிறது.
காவல்துறை இப்படியெல்லாம் சட்டத்துக்கு புறம்பாக வன்முறையை ஜனநாயக முறையில் நடைபெறும்
போராட்டங்கள் மீது கட்டவிழ்த்து விட வேண்டிய அவசியம் என்ன?
போராட்டங்கள்தான் மக்களை உயிரோட்டத்துடன் வைத்திருக்கிறது.
மக்களை அடிமைகளாக நடத்த விரும்பும் அரசியல்வாதிகள்தான் காவல்துறை மூலம் போராட்டங்களை நசுக்க முயற்சிக்கிறார்கள்.
பொய் வழக்கு போட்டால் தண்டனை உண்டு என்ற நிலை உருவாக வேண்டும் .
முதல் தகவல் அறிக்கை பெற்று கைதுக்கு கொண்டு வரும்போதே நீதிபதிக்கு இது குற்றமா இல்லையா
என்பது தெரியாதா? பின் ஏன் ரிமாண்ட் செய்ய வேண்டும்? மேல் எழுந்த வாரியாக பார்க்கும் போதே இது குற்றம் அல்ல
என்றால் விடுதலை செய்வதுதானே முறை?
வேறு ஒரு கண்ணோட்டத்தில் இதில் அநேகமான எல்லா கட்சிகளும் பாதிக்கப் படுகிறார்கள். ஏன் அனைவரும் சேர்ந்து
இந்த சட்ட முறைகேட்டை , எதிர்த்து தக்க நடவடிக்கை எடுத்து வெற்றி பெற முடியவில்லை.
யார் ஆட்சிக்கு வந்தாலும் சட்டத்துக்கு முரணாக அடக்கு முறையை பயன் படுத்த முடியாத நிலையை உருவாக்குவதில்தான்
ஜனநாயகத்தின் வெற்றி இருக்கிறது.
சட்டத்துக்கு புறம்பான உத்தரவுகளுக்கு பணிய வேண்டிய அவசியம் அரசு ஊழியர்களுக்கு இல்லை என்ற ஜெயப்ரகாஷ் நாராயணன்
முன்னெடுத்த முழுப் புரட்சி அமுலுக்கு வந்தே ஆக வேண்டும்.
இல்லையென்றால் தகுதி இல்லாத சுயநல மிக்க அரசியல்வாதிகளிடமிருந்து ஜனநாயகத்தை பாதுகாக்கவே முடியாது.
அனைத்துக் கட்சிகளும் உடனடியாக கவனம் செலுத்தி முடிவு காண வேண்டிய அவசர பிரச்சினை இது.