ஏமாற்றிய ஆறுமுகம் போலி என்றால் ஏமாந்த 1425 பள்ளி கல்லூரி நிர்வாகங்களுக்கு என்ன பெயர்?

கடந்த ஆறு ஆண்டுகளாக  1425 தனியார் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்து வந்திருக்கிறார் ஆறுமுகம் என்ற மாற்றுத் திறநாளி வாலிபர்.

கோவை கலைமகள்  அறிவியல் கல்லூரியில் இதே போன்று பயிற்சி அளித்தபோது லோகேஸ்வரி என்ற மாணவியை இரண்டாவது மாடியில் இருந்து ஆறுமுகம் தள்ளிவிட்டபோது அவர் இறந்ததால் நடைபெற்ற விசாரணையில் தான் அவர் ஒரு போலி பயிற்சியாளர் என்றும் பேரிடர் மேலாண்மை அமைப்பின் அனுமதி இல்லாமல் போலி சான்றிதழ்களை தயாரித்து இதுவரை சுமார் இரண்டரை கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

மாம்பாக்கத்தில் அலுவலகம்,  மத்திய அரசு வேலை உத்தரவாதம் என்று பலரை உதவியாளராக அமர்த்தியது  , பள்ளி கல்லூரி நிர்வாகங்களிடம் பணம் பெறாமல் மாணவர்களிடம் மட்டுமே சான்றிதழ் ரூ 50 வீதம் வசூல் என்று மிகவும் சாமர்த்தியமாக செயல் பட்டு அத்தனை பேரையும் ஏமாற்றி இருக்கிறார் ஆறுமுகம்.

தொலை தூர கல்வி மூலம் டிப்ளோமா படித்து விட்டு இத்தனை கல்லூரிகளையும் அவர் ஏமாற்றி இருக்கிறார்.

கோவை கல்லூரி ஆளும் கட்சி பிரமுகர் சம்பந்தப் பட்டது என்பதால் அவர்கள் குற்ற வழக்கில் சேர்க்கப் படவில்லை.

விசாரணை எப்படி போகிறதோ அதன் படி உண்மைக் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் .

தனியாக இத்தனை பேரை அவர் ஏமாற்றி இருக்க முடியாது.

நமக்கு வரும் ஐயம் ஏமாந்த கல்லூரிகளுக்கு என்ன பெயர். ?

நிர்வாகங்களுக்கு எந்த பொறுப்பும் இல்லையா?

வெறும் சான்றிதழ் களை மட்டுமே நம்பி நிகழ்ச்சிகளை நடத்துவார்களா?

வேறு வகையில் ஒப்பிட்டு பார்த்து உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ள அவர்களுக்கு கடமை இருக்கிறதா இல்லையா?

இந்த இறப்பு ஏற்பட்டிருக்கா விட்டால் அவர் தொடர்ந்து பல பள்ளி கல்லூரிகளை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்திருப்பார்.

சுய பரிசோதனை பள்ளி கல்லூரிகள் செய்து கொள்ள வேண்டும். இவர்களை நம்பி குழந்தைகளை அனுப்பும் பெற்றோர் என்ன தவறு செய்தார்கள்?

பள்ளி கல்லூரிகளை வணிக நோக்கில் நடத்தும் கல்வி வியாபாரிகள் நிர்வாகிகளாக இருப்பதால்தான் இந்த குற்றங்கள் நடை பெறுகின்றன என்றால் தவறா?

பள்ளிக் கல்வித்துறை  இதையெல்லாம் மேற்பார்வை செய்யாதா?

குற்றவாளிகள் தண்டிக்கப் பட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ  அவ்வளவு முக்கியம் அந்தக் குற்றம் நடைபெறுவதை தடுக்கும் கடமையில் இருந்து தவறியோரும்  சிறு அளவிலாவது தண்டிக்கப் படுவது .

பாமரன் ஏமாறலாம்.  பயிற்றுவிப்பவன்  ஏமாறலாமா ?