தமிழக அரசியல்

எந்த மாநிலத்தில் பிற மொழிக்காரன் முதல் அமைச்சராக வர முடிந்திருக்கிறது? ஏமாந்தவன் தமிழன்தானா???!!

Share

தமிழை தாய் மொழியாக கொண்டோர் மட்டுமே தமிழ் நாட்டில் முதல் அமைச்சராக வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது?

மற்ற யாரும் வேறு எந்த பொறுப்புக்கும்  வரட்டும் . மக்கள் பணி புரியட்டும்.     முதல்வராக மட்டுமே வருவேன் என்று பிற மொழிக்காரார்கள் முயல்வது நியாயம்தானா?      ஏன் வேறு பொறுப்புகளில் அமர்ந்து பணி செய்யக் கூடாது?

பல மாநிலங்களில் பிற மொழிக்காரர்கள் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆகி இருக்கிறார்கள்.

ஊராட்சி , நகராட்சி, மாநகராட்சி உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.    ஏன் அமைச்சர்கள் கூட ஆகி இருக்கிறார்கள்.    முதல் அமைச்சர் ஆகி இருக்கிறார்களா?

ஏன் தமிழ் நாட்டில் மட்டும் ஆக முடியும் என்ற நம்பிக்கை வருகிறது?

அவர்கள் நடிகர்கள் ஆகட்டும்.    அரசியல்வாதிகள் ஆகட்டும்.   விஞ்ஞானிகள் ஆகட்டும்.   ஆகச்சிறந்த நிபுணர்கள் ஆகட்டும்.   தமிழர்களை  முதல்வராக ஆள்வதற்கு அந்த தகுதி மட்டும் போதுமா?

போதும் என்கிறது.    அரசியல் சட்டம்.     யாரும் அரசியலுக்கு வரலாம்.    மக்களின் நம்பிக்கையை பெறலாம்.  நம்பிக்கையைப் பெற்றால் ஆளலாம்.    ஆண்டு வந்திருக்கிறார்கள்.          எம்ஜியார்   ஜெயலலிதா தமிழர்களா இல்லையா என்ற விவாதத்தை தள்ளி வைப்போம்.    அவர்களால் மக்களின் நம்பிக்கையைப் பெற முடிந்தது.    ஆண்டார்கள்.

எம்ஜியார் பெரியார் உருவாக்கிய திராவிட கொள்கையை நீர்த்துப் போக எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

ஆனால் ஜெயலலிதா திராவிட இயக்கத்துக்கு தலைமை தாங்கிக் கொண்டே  அதன் கொள்கைகளை குழி தோண்டி புதைக்க அத்தனையும் செய்தார்.     கலைஞர் மீதான எதிர்ப்பு அதிகம் இருந்த அந்த தொண்டர்களுக்கு  தலைமை தாங்கி திராவிட இயக்க கொள்கைகளை மழுங்க செய்த அவரின் செயல்பாடுகளை விமர்சிக்க யாருக்கும் அங்கே தைரியம் இருக்க வில்லை.

வெற்றி தந்த ஆட்சி, ஆட்சி தந்த வசதிகள்  கொள்கைகளை மரத்துப் போகச் செய்து விட்டன.

மூட நம்பிக்கைகளை ஒழிக்க பிரச்சாரம் செய்யும் எந்த அதிமுக தொண்டரையாவது எங்காவது இன்று காண  முடியுமா?

திமுக தொண்டர்களே ஆன்மிக பாதைக்கு திரும்பி விட்டார்கள் என்ற பிரச்சாரம் இப்போது தீவிரமாகி விட்டது.    அதில் உண்மை இருக்கிறதா என்பது வேறு?

ரஜினியையும் கமலையும் எப்படி பயன் படுத்தி மீண்டும் திராவிட இயக்கத்தை பாழ் படுத்துவது என்று படு தீவிரமாக சதி திட்டம் உருவாகி வருகிறது.

தமிழர்  மட்டுமே ஆளவேண்டும் என்றே இருக்கட்டும்.     யார் தமிழர் என்பதில் அடுத்த விவாதத்தை எதிர்பார்த்து நாற்பது ஆண்டுகள் இங்கே வாழ்ந்து மக்களோடு ஒன்றி வாழ்ந்து புகழோடு இருப்பவர்கள்  தமிழர்கள் இல்லையா என்று கேட்பார்கள்?    கேட்டாரே  ரஜினி?    பச்சைத் தமிழன் என்றாரே?

தமிழ் பேசினால் மட்டும் போதாது.     நான் தமிழன் என்ற உணர்வு உனக்கு இருக்கிறதா?   தமிழின் தனித் தன்மையை கட்டிக்  காக்க வேண்டும் என்ற உணர்வு உன் ரத்தத்தில் ஊறி இருக்கிறதா ?   தமிழர் தன்மையை   கட்டிக் காக்க வேண்டும் என்ற கடமை இருப்பதாக உணர்கிறாயா?   தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு என்று உளமார நம்புகிறாயா?    நீ தமிழன். 

                         தமிழ் பேசுபவன் மட்டுமே தமிழன் என்றால் அதே அளவுகோல் எல்லா மாநிலங்களுக்கும் இருக்க வேண்டும் அல்லவா?

எந்த மாநிலத்தில் பிற மொழி பேசுபவர்கள் என்ன செல்வாக்கு இருந்தாலும் முதல் அமைச்சராக அனுமதிக்கிறார்கள் ?     சிந்திக்கக் கூட முடியுமா?

இந்தக் கேள்விக்கு பதில் காண்பதில் தமிழர் தலைவர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தலைவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.     ஏன் அவர்கள் இந்த கேள்வியை கேட்பதும் இல்லை.    பதில் சொல்வதும் இல்லை.     அவர்கள் தகுதியில் அவர்களுக்கே நம்பிக்கை இல்லை என்பதா?

எவரும் தமிழர் தலைவர்களாக இல்லை என்பதும் எல்லாரும் ஏதாவது ஒரு சாதி தலைவர்களாக மட்டுமே இருக்கிறார்கள் என்பதுதானே உண்மை!

ஆக தமிழர்களாக ஒன்று படுவதில் அல்லது ஒன்று படுத்துவதில் சாதி குறுக்கே நிற்கிறது.

தமிழர்கள் ஒன்று படுவது எப்படி  , சாதி ஒழிப்பது அல்லது பேதம் ஒழிப்பது எப்படி , இடையில் வரலாற்று உண்மையாக உருவாகும் கோடரிக் காம்புகளை எதிர் கொள்வது எப்படி என்று உடனடியாக விடை கிடைக்க முடியாத பல கேள்விகள் வரிசை கட்டி நிற்கின்றன.

அவைகளுக்கெல்லாம் நிதானமாக  பதற்றமில்லாமல் பொறுமையாக பேசி முடிவு கண்டே ஆக வேண்டும்.

அதுவரை எந்தக் காரணம் கொண்டும்,

தமிழை தாய் மொழியாக கொண்டிராத எவரையும் ,

தமிழக முதல்வராக வர அனுமதிக்க மாட்டோம் ,

என்ற உறுதியை  உளமார உறுதி செய்வோம்.

அந்த நிலை உருவானால் தடுக்க எல்லா வகையிலும்

ஜனநாயக முறைப்படி போராடி தடுப்போம் ! வெல்வோம்!

 

 

This website uses cookies.