அர்ப்பணிக்கப்பட்ட தவ வாழ்வு வாழ்கிறாராம்???!!! சொல்லிக் கொள்கிறார் ஜெயலலிதா!!!

jayalalitha

அண்ணாவின் 108  வது பிறந்த நாளில் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் ஜெயலலிதா பல முரண்பாடுகளை  உதிர்த்து இருக்கிறார்.

அண்ணா வைப் பற்றி சொல்லும்போது ‘ பெரியாரது சமூக சீர்திருத்த கருத்துகளுக்கு செயல் வடிவம் தந்த தியாகச் செம்மல் , தமிழ்நாட்டில் பகுத்தறிவு தழைத்தோங்கவும் ஏற்றத் தாழ்வுகள் அற்ற சமத்துவ சமுதாயம் உருவாகிடவும் தமிழர் என்ற ஓர் அடையாளத்தின் கீழ் தமிழ்ச் சமூகம் வாழ்ந்திடவும் தன் வாழ்நாள் எல்லாம் உழைத்த ஒப்பற்ற தலைவர் ‘ என்று புகழாரம் சூட்டுகிறார்.

தீய சக்தி என்று அடிக்கடி கலைஞர் கருணாநிதியை மறைமுகமாக குறிப்பிடும் ஜெயலலிதா தன்னைப் பற்றி கூறும்போது ‘ மக்களுக்கு தொண்டு  செய்ய இந்த வாய்ப்பு எனக்கு அருளப் பட்ட ஒன்றாகவே ஏற்று அர்ப்பணிக்கப் பட்ட தவ வாழ்வினை நான் வாழ்ந்து வருகிறேன்.’ என்று முடிக்கிறார்.

மேலும் கடைசியில் ‘ தமிழ்நாட்டில் தனி மனித காட்டாட்சிக்கோ ஒரே குடும்பத்தின் வாரிசு ஆட்சிமுறைக்கோ ஜனநாயக விரோத செயல்களுக்கோ எப்போதும் இடமில்லை ‘ என்றும்   முடிக்கிறார்.

படிக்கும் எவருக்கும் இவர் எப்போது தமிழர் அடையாளம் காப்பாற்ற பாடுபட்டார்  இவருக்கு யார் தொண்டு செய்ய வாய்ப்பு அருளினார்கள்  இவர் வாழ்வது  தவ வாழ்வா  என்ற கேள்விகள் எழுவதை தவிர்க்கவே முடியாது .

தலைமைப் பதவியை கைப்பற்ற இவர் ஜானகியோடு போராடியது யார் தூண்டி? தலைமையை கைப்பற்றி எல்லாரையும் விரட்டி ஓரங்கட்டி அடிமைப் படுத்தி காட்டாட்சி நடத்தி வருகிறாரே அதுதான்  தவ வாழ்வா??

இவர் கட்சியில் ஜனநாயகம் இருப்பது யாருக்காவது தெரியுமா?    தனி மனித காட்டாட்சி என்று தன்னை தானே சொல்லிக் கொள்கிறாரா?

சொத்துக்  குவிப்பு வழக்கில் மாட்டி சிறைக்குச் சென்றது உச்ச நீதி மன்ற மேல்முறையீட்டில் பதவி தொக்கி நிற்பது எல்லாம் இவருக்கு தெரியாதா?   அல்லது யாருக்கும் நினைவிருக்காது  என்று நம்புகிறாரா?

அலிபாபாவும்  நாற்பது  திருடர்களும் என்று கேள்விபட்டிருக்கிறோம் .         இன்று ஊழல் செய்வதையே ஒரு கட்சியின் அடி மட்டம் முதல் மேல் மட்டம் வரை வரையறை செய்யப் பட்ட ஒரு நிறுவனமாக உருவாக்கி அதில் பங்கேற்போர்  அனைவரையும் பந்து போல் தூக்கிப் போட்டு விளையாடுவதுபோல் ஆடிக்கொண்டிருகிறாரே  அதற்குப் பெயர் ஆட்சியா??

அடிமைகளின் கூடாரம் என்று ஒரு முன்னாள் அடிமை சசிகலா புஷ்பா சொல்கிறாரே அதில் உண்மையில்லையா?

ஜெயலலிதாவின் அறிக்கை அவரையே சுட்டிக் காட்டும் என்பதை அறியாமலே அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.   சும்மா இருந்திருக்கலாம் .