கலைஞர் கருணாநிதி என்ற ஒற்றை மனிதரை சுற்றி கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் சுற்றி சுழன்று கொண்டே இருக்கிறது.
அவர் மட்டும் வெற்றியானாலும் தொல்வியானாலும் துவளுவதே இல்லை.
சாமானியர்களின் குரலாகவே அவரது குரலும் எழுத்தும் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருந்தது.
சாதனைகளின் பட்டியல் நீண்ட நெடியது.
அவர் எதிர் கொண்ட எதிரிகளின் பட்டியலும் மிக நீண்டது.
எல்லாக் காலத்திலும் அவரை யாராவது விமர்சித்துக் கொண்டே இருப்பார்கள்.
இப்போதுதான் அவரை யாரும் விமர்சிப்பது இல்லை. இது ஏதோ ஒரு அரசியல் நாகரிகம் கருதி மட்டும் இல்லை.
அவரது உழைப்பின் விளைவுகளை எல்லாரும் நினைத்துப் பார்த்து அவர் ஒரு கட்சிக்கு மட்டும் தலைவர் அல்ல தமிழ் நாட்டவர் அனைவருக்கும் தலைவர் என்ற உணர்வு தான் அவரை விமர்சிப்பதை தடுக்கிறது.
கடவுள் நம்பிக்கை இல்லாத கலைஞருக்காக ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறார்கள். அதுவும் எல்லா மத சாமிகளையும்.
தமிழ் தன் இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடிந்ததில் கலைஞரின் பங்களிப்பு மிக அதிகம்.
வசனகர்த்தா , பாடலாசிரியர், நடிகர், சீர்திருத்தவாதி , எழுத்தாளர், இலக்கியவாதி , 13 முறை தோல்வியே சந்திக்காத சட்ட மன்ற உறுப்பினர், ஐம்பதாண்டுகளாக ஒரு கட்சியின் தலைவர், ஐந்து முறை முதல் அமைச்சர் என்று பன்முகத் தன்மை கொண்ட தலைவர் கலைஞரைப் போல் யாரும் இல்லை. இனி தோன்றப் போவதும் இல்லை.
தமிழ்த்தாய் வாழ்த்தும் , செம்மொழி சிறப்பும் , வள்ளுவர் கோட்டமும் , திருவள்ளுவர் சிலையும் , சென்னையும், சமத்துவபுரங்களும் , சத்துணவு திட்டமும், அவசரநிலையின்போது அவர் காட்டிய எதிர்ப்பும், பிற்பட்டோர் மிக பிற்பட்டோர் அருந்ததியர் இட ஒதுக்கீடும், இந்தி திணிப்பு எதிர்ப்பும், தொய்வில்லாத வர்ணாசிரம எதிர்ப்பும், பார்ப்பனர் அல்லாதோர் அர்ச்சகர் ஆன வரலாறும், சாதி மறுப்பு திருமணங்களும், சுயமரியாதை திருமணம் சட்டப்படியானதும் இன்னும் எண்ணற்ற சாதனைகளும் கலைஞரின் புகழை உயர்த்திப் பிடித்துக் கொண்டே இருக்கும்.
காவேரி மருத்துவனை வெளியே இருந்து ‘ எழுந்து வா தலைவா ‘ என்று தினமும் எழும்பும் தொண்டர்களின் குரல் அவரது காதில் கேட்காமலா போகும்?
இளவயதில் தொடங்கிய போராட்டத்தை இப்போது மருத்துவ மனையில் தொடர்கின்றார் கலைஞர் .
மீண்டு மீண்டும் வருவார்!!!