கமல்ஹாசன் அரசியலில் இறங்கி கட்சி தொடங்குவது முடிவாகிவிட்ட ஒன்று.
ஜெயலலிதா இடத்தை நிரப்ப தகுந்த தகுதியான நபர் இவர்தான் என்று தீர்மானித்து முடிவெடுத்து அவர்கள் காரியத்தில் இறங்கி விட்டார்கள்.
37 வருடம் ஒதுங்கி இருந்து விட்டேன். இனி இருக்க முடியாது என்கிறார். ஏன் ஒதுங்கி இருந்தார் என்பதற்காக காரணத்தை மட்டும் சொல்ல வில்லை. சொல்ல மாட்டார். ஜெயலலிதா இருக்கும்போது நான் எப்படி இறங்குவது என்பதை வெளிப்படையாக் சொல்ல முடியாது அல்லவா?
இவர் ஏதோ இந்து மதத்தை இழிவு படுத்தி விட்டதாக போலியாக குற்றச்சாட்டு எழுப்பி விளம்பரம் தேடிக் கொடுத்துக் கொண்டிருக்கும் வேலையை தான் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இன்று திடீர் பல்டி அடித்து நான் ஒன்றும் இந்து மதத்துக்கு எதிரானவன் அல்ல. என் குடும்பத்தவர் சாமி கும்பிடுகிறார்கள். கோவிலை இடிக்க வேண்டும் என்று நான் சொல்ல வில்லை. நான் அங்கு படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும் என்றெல்லாம் பேசி விட்டு என்னை பிராமணர்களும் ஆதரிக்க வேண்டும் பிராமணர் அல்லாதவர்களும் ஆதரிக்க வேண்டும் என்றும் பேசுகிறார்.
நான் நாத்திகன் அல்ல என்றும் இன்று சொல்லி விட்டார்.
இப்படி எல்லா வகையிலும் குழப்பிக் கொண்டு யாரையும் பகைத்துக் கொள்ளாமல் எல்லாருடைய ஆதரவையும் பெற்று விட வேண்டும் என்று மகா பல்டி அடித்துக் கொண்டிருக்கிறார் கமல்ஹாசன்.
கடைசி குண்டுதான் முப்பது கோடி.
இன்னும் கட்சிக்கு கொள்கையை சொல்ல வில்லை. பெயர் வைக்க வில்லை. உறுப்பினர் சேர்க்க வில்லை. அமைப்பை உருவாக்கவில்லை. அதற்குள் பண முதலீட்டு தேவையை முன்வைக்கிறார்.
கட்சி என்பதை ஏதோ சினிமா தயாரிப்பு என்பதைப்போல் கதை ,வசனம், இசை, காமிரா, நடிகர்கள், இயக்கம் என்றெல்லாம் பட்ஜெட் போட்டு தயாரிப்பதைப்போல் கட்சிக்கும் என்னென்ன வெல்லாம் தேவை என்பதை கணக்கிட்டு முப்பது கோடி தேவை என்று கணக்கிட்டு அதை ரசிகர்களிடம் முதலீடாக பெற்று கட்சி தொடங்க இருக்கிறார் கமல்ஹாசன்.
சினிமா தயாரிப்பு எப்படி கலைத்தொண்டு என்பதோடு காசு பார்க்கும் தொழிலோ அதைப்போல கட்சியும் முதல் போட்டு லாபம் பார்க்கும் தொழிலாக கமல்ஹாசன் பார்க்கிறார் என்றுதானே பொருள்.
கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் காரியத்துக்காக பலர் லெட்டர் பேடு கட்சி நடத்துகிறார்கள். அவர்களில் ஒருவராக நிச்சயம் கமல்ஹாசன் இருக்க மாட்டார். ஏன் என்றால் வருவாயில் வரிபோக வெள்ளையாக பணம் வாங்குபவர் அவர் என்பது சொல்லக் கேள்வி.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். கட்சி ஆரம்பிக்க பணம் தேவைதான். ஆனால் பணம் மட்டுமே போதாது.
பிரபலமானவர் ,பணம் உள்ளவர் இந்த இரண்டுமே கட்சி தொடங்கி ஆட்சியை பிடிக்க போதும் என்பது ஒருபோதும் நடவாது.
நீ யார் என்பதை சொல். உனது கொள்கை என்ன சொல். மற்றவர்களிடம் இருந்து நீ எவ்விதத்தில் மாறுபடுகிறாய் என்பதை சொல். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழுக்கும் தமிழருக்கும் தொண்டாற்றுவேன் என்று சொல்.
வாழிய செந்தமிழ்
வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு
என்ற பாரதியின் வரிகளுக்கு உருவம் கொடுக்க பாடுபடுவேன் என்று சொல்.
தமிழுக்கும் தமிழருக்கும் விசுவாசமாக இல்லாத எவரும் இங்கு ஆளும் வாய்ப்பை இனி பெறவே முடியாது.
பத்து நல்ல காரியங்களை நடத்தி விட்டு நான் நல்லவன் என்று பறை சாற்ற இந்த முப்பது கோடி முதலீடு போதும் என்று தப்பு கணக்கு போட வேண்டாம்.
முகமூடி போட்டு க் கொண்டு மக்களை ஏமாற்றிய காலம் மலையேறி விட்டது என்பதை யாராவது கமல்ஹாசனுக்கு சொல்லுங்களேன். ??!!