பார்ப்பனர்கள் எல்லா துறைகளிலும் கோலோச்ச திட்டமிட்டு வெற்றியும் பெற்று வந்தவர்கள்.
எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் அதில் பார்ப்பனர்கள்தான் முன்னணியில் இருப்பார்கள்.
மற்ற துறைகளில் எப்படி இருந்தாலும் அரசியல் துறையில் மட்டும் எடுத்துக் கொண்டால் கடந்த நூறாண்டு அரசியலில் பார்ப்பனர்கள் முன்னணி வகித்தே வந்திருக்கிறார்கள்.
காங்கிரஸ் அரசியலில் ராஜாஜி பார்பனர்களின் பிரிதிநிதியாகவே செயல்பட்டார். ஒருபோதும் அவர் அதை ஒப்புகொள்ள மாட்டார். ஆனால் எல்லா பார்பனர்களும் அவர் பின்னே நின்றார்கள்.
காங்கிரசில் காமராஜர் கை ஓங்கிய பிறகு சுதந்திரா கட்சி தொடங்கினார்.
அவருக்குப் பிறகு திராவிட இயக்கத்தில் எம்.ஜி.ஆரின் தயவால் தன்னை இணைத்துக் கொண்ட செல்வி ஜெயலலிதா தன் செகுலர் இமேஜை காப்பாற்றிக் கொள்ள அரும்பாடு பட்டார்.
தன்னை சட்டமன்றத்திலேயே ‘ஆமாம் நான் பாப்பாத்திதான்’ என்று பெருமையுடன் சொல்லிக்கொண்ட ஜெயலலிதா மிக கவனமுடன் திராவிட இயக்க கொள்கைகளுக்கு எதிரானவராக தன்னை வெளிப் படுத்திக்கொண்டதே இல்லை.
தனிப்பட்ட வாழ்வில் மிகவும் ஆச்சாரமானவராக தன்னை காட்டிக் கொள்ளவும் அவர் தவறவில்லை.
நெற்றி செந்தூரம் அவரை அய்யங்கார் என அடையாளம் காட்டியது. கவலைப் படவில்லை. கோவில் கோவிலாய் சுற்றி வந்து பார்ப்பனர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியது முதல் வேட்பாளர் தேர்வில் ஜாதக குறிப்புகளை இணைப்பது வரை சனாதன தர்மத்தின் பிரதிநிதியாகவே தன்னை வெளிப் படுத்திக் கொண்டார். பார்பனர்கள் அவர் பின்னே அணி வகுத்தார்கள்.
எம்ஜியார் மூகாம்பிகை கோவிலுக்கு நகை காணிக்கை செலுத்தியதை தவிர தன்னை சனாதன தர்ம ஆதரவாளராக காட்டிக் கொண்டதே இல்லை.
எம்ஜியார் காலத்தில் பெரியார் அண்ணா கலைஞர் திராவிட இயக்க தலைவர்களாக உச்சத்தில் இருந்தது மட்டுமல்ல அவர்களோடு தத்துவார்த்த ரீதியாகவும் ஒத்த கருத்தில் இருந்தார். எனவே எம்ஜிஆர் அவர்களுக்கு எதிராக எத்தகைய முரண்பட்ட செயல் களையும் செய்ததில்லை. எம்ஜிஆர் திராவிட இயக்கத்தின் கொள்கை வழி தலைவர்தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும் பார்ப்பனீய எதிர்ப்பு மூடநம்பிக்கை எதிர்ப்பு சாதி ஒழிப்பு போன்றவைகளை அவர்கள் அளவுக்கு உயர்த்தி பிடிக்காவிட்டாலும் எதிர் திசையில் சென்றதில்லை. இதுவே ஓரளவு மென்மையான போக்காக கருதப் பட்டது.
ஆனால் ஜெயலலிதாவை அப்படி சொல்ல முடியுமா? அவர் பார்ப்பனீய பிரதிநிதி என்பதில் அஇஅதிமுக வினருக்கு ஆட்சேபம் இருக்கலாம். அதில் உண்மையிருக்கிறதா?
ஜெயலலிதா பெரியார் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செய்தார். அண்ணா பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செய்தார் என்பது எல்லாம் அவர்களின் கொள்கைகளில் அவருக்கு உடன்பாடு என்பதின் அடையாளமாக கொள்ள முடியாது. மரியாதை செய்யாமல் திராவிட இயக்க தலைவராக நீடிக்க முடியாது என்பது அவருக்கு தெரியாதா?
சாதி அமைப்புக்கு எதிராக என்றாவது பேசியிருக்கிறாரா? சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்களின் ஆதிக்கத்தை ஒழித்துக் கட்ட முனைப்பு காட்டியிருக்கிறாரா?
அதைப்போலவே ஜெயலலிதா மறைவு பார்ப்பன பிரதிநிதி இடத்தில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது. அந்த இடத்தை பூர்த்தி செய்ய வந்தவர்தான் கமல்ஹாசன்.
இரண்டு திராவிட இயக்கங்களோடும் உறவில்லை என்று கமல்ஹாசன் சொன்னது தத்துவார்த்த ரீதியில்தான்.
பாஜக வை எதிர்த்து எப்போதாவது கமல்ஹாசன் கடுமையான விமர்சனத்தை வைத்திருக்கிறாரா ?
ஸ்ருதி என்பது வேதத்தின் பெயர். வேதத்தை ஏற்றுக் கொள்ளாத எவரும் வேதத்தின் பெயரான ஸ்ருதியை தன் மகளுக்கு பெயராக வைப்பாரா?
கமல்ஹாசன் என்ற தனி நபருக்கு அரசியலுக்கு வரவும் கொள்கைகளை பிரச்சாரம் செய்யவும் எல்லா வகையான உரிமையும் உண்டு. பார்ப்பனர் என்பதால் அவருக்கு எந்த உரிமையும் இல்லாமல் போய் விடாது.
ஆனால் அவரை ஏதோ எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவரைப் போலவும் சாதி மதங்களுக்கு எதிரி போலவும் சிலர் சித்தரிக்க முயல்வதை தவறு என்று சொல்வதே நமது நோக்கம்.
தமிழர்களை எந்த வேடம் பூண்டு வந்தாலும் ஏமாற்ற முடியாது. அது தமிழர் என்ற வேடமானாலும் கூட.