கமல்ஹாசன் கட்சி தொடங்கி தேர்தலில் நிற்பது அவரது உரிமை.
மக்கள் ஏற்றுக்கொண்டால் தாராளமாக எந்தப் பொறுப்பிற்கும் வரலாம்.
ஆனால் ஏமாற்றுவதையே ஒரு கலையாக செய்து வருவத்தைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை.
அரசியலுக்கு வந்த பின் எத்தனை வேடம் போட்டிருக்கிறார் என்பதை நினைத்துப் பாருங்கள்.
முதலில் மீசை வைக்காமல், பிறகு சண்டியர் பாணி மீசை, பிறகு இளைஞர் மீசை, தாடியோடு கொஞ்ச நாள், இப்போது அரைகுறை மீசை என்று சினிமாவில் சீனுக்கு சீன் கெட்டப்பை மாற்றுவதுபோல் அரசியலிலும் செய்து வருகிறார்.
ஏன் இந்த அரசியல் நாடகம்.?
கொள்கை என்றாலே என்னவென்று விளக்கம் சொல்லவே மாட்டார். சொன்னால் யாராவது எதிரியாவார்களே? சொல்லாமல் விட்டால் எல்லாரும் ஏமாறுவார்கள்.
ஒரே நேரத்தில் தேசியத்தையும் திராவிடத்தையும் தமிழியத்தையும் ஏமாற்ற வேண்டும். அதற்கு கொள்கை சொல்லக் கூடாது.
அவைகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் சொல்லக் கூடாது. எதிரியாகி விடுவார்களே?
அதேபோல் எந்தப் பிரச்னையிலும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவே மாட்டார். யாருக்கும் புரியாமல் பேசுவதை திட்டமிட்டே செய்கிறார்.
ஸ்டெர்லைட், காவிரி , முல்லை பெரியாறு, பெட்ரோலிய மண்டலங்கள் , இலங்கை தமிழர், தமிழ் மொழி பாதுகாப்பு, இந்தி திணிப்பு , தமிழர் உரிமை என்று எதை எடுத்தாலும் உறுதியான நிலைப்பாட்டை கமலஹாசன் சொன்னதே கிடையாது. எதற்கெடுத்தாலும் மழுப்பலான இரட்டை நிலைப்பாட்டைத் தான் பதிலாக கூறுவார்.
நோகாமல் நோன்பிருப்பது, பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன், என்ற பழமொழிகள் அவர் போன்றவர்களால் தான் உருவாகி இருக்க முடியும்.
நாத்திகர் என்று பீற்றிக் கொள்கிறவர் எப்போதாவது பெரியாரை உயர்த்திப் பிடித்திருகிறாரா? அண்ணாவை பாராட்டி பேசியிருக்கிறாரா? அடக்கி வைக்கப்பட்டவர்கள் மீள் எழுவது எப்படி என்று பேசியிருக்கிறாரா? நூற்றாண்டுக் காலமாக தமிழ் தன் இடத்தை பெறுவதை தடுத்தவர்கள் யார் என்று பேசியிருக்கிறாரா?
இனத்தைப் பற்றி மொழியைப் பற்றி பேசாத கமல்ஹாசன் தமிழ்நாட்டில் அரசியல் செய்யத் துணிகிற செயல் பார்ப்பனீயத்தின் சூழ்ச்சி இல்லையா?
ஏமாந்த தமிழர்கள் அவருடன் அணிவகுத்து நிற்கிறார்கள். அவர்கள் மீது தவறில்லை.
அரசியலில் அணிவகுத்து நிற்கும் அவலங்கள் அவர்களை அவரிடம் அடைக்கலம் அடையச் செய்திருக்கிறது.
ஆனால் உங்கள் வெற்றி யாரை பலனடையச் செய்யும்? இன எதிரியை உள்ளிருந்தே கொல்லும் நோயை?
தான் உண்மையானவர் என்று நிரூபிக்க கமல்ஹாசன் எதையுமே செய்ய வில்லை.
எத்தனையோ பார்ப்பனர்கள் பொதுஉடைமை இயக்கங்களில் பங்கேற்று மிக உயர்ந்த பதவிகளில் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். யாரும் அவர்கள் மீது இனப் பாகுபாடு குற்றச்சாட்டு கூறியதில்லை.
இப்போதும் கூட எல்லாரையும் களத்தில் இறக்கி விட்டுவிட்டு தான் ஒதுங்கி நிற்க வேண்டிய அவசியம் என்ன என்பதற்கு அவர் கூறும் விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படியாகவா இருக்கிறது?
சொல்லுவதைக் கேட்கும்போதே யோவ் நீ சரியான ஏமாற்றுக் காரனைய்யா என்றுதானே எண்ணம் தோன்றுகிறது.
ஏமாறும் தமிழினம் இவரிடமும் ஏமாந்து விடக் கூடாதே என்ற ஏக்கமும் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை .
தோல்வி நிச்சயம். ஆனால் தோல்வியால் பார்ப்பனீயம் ஒருபோதும் துவண்டு விடாது. அதுதான் நமக்கு அச்சம்.
அச்சம் அகல ஒரே வழி பெரியாரைத் துணைக் கொள்வதுதான்.