பார்ப்பனீயம் கோலோச்சும் இந்து மதவாதத்தை எதிர்க்கும் இயக்கம் திராவிட இயக்கம்.
திராவிட இயக்கம் வலிமையாக இருக்கும் வரை பார்ப்பனீயம் வலிமை பெற முடியாது. பார்ப்பனீயம் அதிகாரம் பெற ஒரே வழி திராவிட இயக்கத்தை பலவீனபடுத்துவதுதான்.
திராவிட இயக்கத்திற்கு பார்ப்பனர்கள் தலைமை ஏற்க முடியும் என்பதை நிரூபித்தவர் ஜெயலலிதா. ஆனால் பார்ப்பனீயத்தை ஓரளவுக்கு மேல் அவரால் வெளிப்படையாக ஆதிக்கம் செலுத்த செய்ய முடியவில்லை. முடியாததால்தான் பெரியார் படத்துக்கு மரியாதை செலுத்தினார். அண்ணாவுக்கு மரியாதை செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். பாஜகவுடன் இனி கூட்டணி கிடையாது என அறிவித்தார்.
இப்போது திமுக மட்டும்தான் திராவிட இயக்கத்தின் ஒரே வாரிசு. இல்லையென்று மறுப்போர் சிலர்தான். எனவே அந்த இடத்தில இருந்து திமுகவை அகற்றி அந்த இடத்தில் ஒரு பார்ப்பனரை அமர்த்தும் வேலைதான் இப்போது கமல்ஹாசன் பார்ப்பது.
‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து .
அவர் பெயர் கோட்சே.’ இதுதான் கமல்ஹாசன் பேசிய பேச்சு. இதில் எந்த கருத்தும் தவறு இல்லை. வரலாற்று உண்மை. எந்த இடத்திலும் இந்துக்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்றோ இந்து மதம் தீவிரவாதம் சார்ந்தது என்றோ கமல் கூறவில்லை.
இதே கமல்ஹாசன் ஹே ராம் என்று ஒரு படம் எடுத்தார். அதில் முஸ்லிம் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டு அதற்கு காரணம் காந்திதான் என்று அவரை கொலை செய்ய முயற்சித்தபோது காந்தியை கோட்சே கொலை செய்து விடுகிறார். அதாவது கமல் செய்ய வேண்டிய வேலையை கோட்சே செய்தார் என்பதே கதை. எங்காகிலும் காந்தி கொலை அநியாயமானது என்று காட்ட முயற்சித்திருந்தாரா?
இப்போது கமல்ஹாசன் பேசியதை பெரிதுபடுத்தி கமல் ஏதோ இந்து எதிர்ப்பாளர் என்பது போலவும் இந்து எதிர்ப்பு சக்திகளின் பிரதிநிதி கமல்ஹாசன் என்பது போலவும் ஊரில் உள்ள எல்லா பார்ப்பனர்களும் அதன் ஆதரவாளர்களும் பிரச்சாரம் செய்வது ஏன்?
சூது அறியாமல் வீரமணியும் கமல் சொல்வது உண்மைதானே என்கிறார்.
எச் ராஜா கமல் ஒரு இந்து துரோகி என்கிறார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமல் நாக்கை வெட்ட வேண்டும் என்கிறார். அவரது சக அமைச்சர்களும் கமலை சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்கிறார்கள்.
அஸ்வினி உபாத்யாய என்ற பா ஜக உறுப்பினர் டெல்லி நீதிமன்றத்தில் கமல் மீது வழக்கு போட்டு அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது.
தமிழ்நாடு முழுதும் பாஜககாரர்கள் கமல் மீது காவல் துறை புகார் கொடுக்கிறார்கள். ஒரு வழக்கும் பதிவாகிறது.
கமல் முன்ஜாமீன் கோருகிறார்.
பிரதமர் மோடி இந்து என்பவன் தீவிரவாதியாக இருக்க முடியாது என்று பேசுகிறார்.
மன்னார்குடி செண்பக மன்னார் ஜீயர் என்பவர் கமலை தமிழகத்தில் நடமாட விடமாட்டோம் என்கிறார். அவர் இன்னும் கூடுதலாக கோட்சேவை உச்சநீதிமன்றம் குற்றவாளி இல்லை என்றது என்றும் கமலுக்கு ஐ எஸ் இயக்க தொடர்பு உள்ளது என்றும் அவர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டார் என்றும் கோட்சே இந்த நாட்டின் மீது தேசபக்தி வைத்திருந்தார் என்றும் அதனால்தான் அவர் அந்த செயலை செய்தார் என்றும் தாறுமாறாக தன் அறியாமையையும் வெறித்தனத்தையும் வெளிக்காட்டினார்.
இந்த கமல் எதிர்ப்பு விமர்சனங்கள் எல்லாம் எதை முன் வைக்கின்றன.? அவர் பார்ப்பனீய எதிர்ப்பாளர் என்பதாலா?
பள்ளபட்டி முஸ்லிம்கள் மத்தியில் கமல் ஏன் இதை பேசினார் என்பதே ரகசியம்.
என்ன செய்தாலும் கமல் ஒருக்காலும் திராவிட இயக்கங்களின் முகமாக மாறவே முடியாது. யாரும் நம்பமாட்டார்கள்.
பிறரை அடிமைப் படுத்த பார்ப்பனீயம் எந்த ரூபத்திலும் வரும் என்பது திராவிடர்கள் படித்த பழைய பாடம்.
அதிமுகவினர் பாஜக பக்கம் சாய தங்களை தயார்படுத்தி கொண்டு வருகின்றனர் என்பதும் தெளிவாகிறது.
கமல்ஹாசன் தன்னை உண்மையான நாத்திகன் என்றோ திராவிட இயக்க சிந்தனைகளுக்கு ஆதரவாளர் என்றோ இன்னும் நிரூபிக்க வில்லை. இன்று வரை திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக இயக்கம் காண வேண்டும் என்று திராவிட இயக்கங்களை பலவீனப் படுத்தும் முயற்சியில்தான் இருக்கிறார்.
திராவிட இயக்க தலைமையின் பேரில் விமர்சனம் இருந்தால் கொள்கை ரீதியாக தன்னை வலியுறுத்திக் கொள்ள முயற்சிக்கலாமே? ஏன் செய்யவில்லை.?
இதற்கெல்லாம் விடை கிடைக்காமல் கமலுக்கு ஆதரவு கிடைக்காது.