மனைவி லதா மீது ஏழு கோடி கோச்சடையான் படத்தில் பட்ட கடனை கட்ட கோர்ட்டு உத்தரவிடுகிறது. அவரது ஆஷ்ரம் பள்ளி மீது வாடகை கட்டவில்லை என்று புகார் கோர்ட்டுக்கு செல்கிறது. ரஜினி சம்பந்தி தர வேண்டிய கடனுக்கு ரஜினி ஜாமீன் போட்டாரா என்று வழக்கு கோர்ட்டுக்கு செல்கிறது.
இதெல்லாம் சாதாரணமாக ஒருவர் சந்திக்கிற பிரச்னைகள்தான். கோர்ட்டுக்கு ஒருவரை இழுத்து விட்டார்கள் என்பதால் அவர் குற்றவாளியாகி விடமாட்டார். இதுவரை அவர் மீது யாரும் அந்த குற்றச்சாட்டை வைக்க வில்லை.
ஆனால் அவர் தான் சமுதாயத்தை சீர்திருத்த வருகிறேன் , சிஸ்டம் சரியில்லை என்று சொல்லி விட்டு வரும்போது இவைகள் எல்லாம் முன்னே வரும். தன் குடும்ப சிஸ்டத்தை முதலில் சரி செய்து விட்டு அரசியலுக்கு வாருங்கள் ரஜினி என்று சொல்லத் தோன்றுகிறதா இல்லையா?
அதேபோல் தான் கமல் கதையும். அவரது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை விமர்சனத்துக்கு உள்ளானதில்லை. ஏன் என்றால் அது அவரது தனிப்பட்ட வாழ்க்கை.
ஆனால் அவர் இந்த சமூகத்தை திருத்த வருகிறேன் என்று வரும்போதுதான் அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் விமர்சனத்துக்கு உள்ளாகும்.
அவரும் கவுதமியும் இணைந்து பல ஆண்டுகள் குடும்பம் நடத்தியது எல்லாருக்கும் தெரியும். யாரும் விமர்சனம் செய்ததில்லையே.
தன் மகள் எதிர்காலம் கருதி கமலை பிரிகிறேன் என்று கவுதமி சொன்னபோது கூட யாரும் விமர்சனம் செய்ததில்லை.
அவருடன் வாழ்க்கையை பகிர்ந்து கொண்டவர் பிரிந்த பிறகு அவர் எனக்கு சம்பள பாக்கி தரவேண்டும் என்று குற்றம் சாட்டுகிறபோது கமலின் குணம் இங்கே விமர்சனத்துக்கு உள்ளாகிறது.
நேராக பதில் கூறாமல் தனது நிறுவனம் பதில் கூறும் என்று கமல் கூறுவது எவ்வளவு மனித தன்மை கொண்டது?
இந்த கவுதமிதான் நேராக பிரதமரை சந்திக்கும் செல்வாக்கு உள்ளவர். அந்த செல்வாக்கை கொண்டு தணிக்கை குழு உறுப்பினர் பதவியை பெறும் தகுதி பெற்றவர்.
கவுதமியின் குற்றச்சாட்டை கமல் கையாளும் விதம் அவரது அரசியல் தலைமை பண்பிற்கு உகந்ததாக இல்லை.
கமல் தன்னை ஸ்தாபக தலைவர் என்று தனது லெட்டர் பேடில் அச்சடித்துக் கொண்டது விமர்சனத்துக்கு உள்ளான பிறகு வெறும் தலைவர் என்று மாற்றி கொண்டது அவரது முதிர்ச்சியற்ற தன்மையை காட்டுகிறது.
ஆக , கமல் ரஜினியின் அரசியல் தலைமை பண்பை கவுதமியும் லதாவும் தீர்மானித்து விட்டார்கள்.