எம் என் . என அழைக்கப் பட்ட எம் நடராசன் சசிகலாவின் கணவர்.
தஞ்சையில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முன் நின்றவர்- தமிழரசி-புதிய பார்வை இதழ்களின் ஆசிரியர்- திராவிட இயக்க பார்வை கொண்டவர்- ஜெயலலிதாவின் ஆலோசகராக இருந்து பின் சசிகலாவின் பின்னால் இருந்து இயக்கியவர்- ஈழப் போராளிகளின் ஆதரவாளர் – முள்ளி வாய்க்கால் முற்றம் அமைக்க பழ. நெடுமாறனுக்கு உதவியவர் என்று பல முகங்கள் கொண்டவர்.
எனக்கு தனிப்பட்ட முறையில் நாற்பதாண்டு நட்புடையவர். அவருக்காக ஷா விசாரணை கமிஷனில் வழக்கறிஞர் என்ற முறையில் ஆஜராகியவன் நான். எண்ணற்ற திருமண விழாக்களிலும் அவருடன் கலந்து கொண்டிருக்கிறேன். ஈழப் போராளிகளுக்காக உயிராயுதம் ஏந்திய முத்துக்குமார் மற்றும் அவரைத்தொடர்ந்து தீயில் கருகிய தியாகிகள் பலரது இரங்கல் நிகழ்ச்சிகளில் பழ. நெடுமாறனுடன் நான் கலந்து கொண்டபோது எல்லாம் நடராசன் வர தவறியது இல்லை.
அவருக்கு எனது இதயம் நிறைந்த அஞ்சலி. அவரது ஆன்மா இறைவனில் சங்கமிக்க பிரார்த்திக்கிறேன்.
திமுக செயல் தலைவர் தளபதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் கட்சி அரசியல் தாண்டி தமிழர் பண்பாட்டு அடிப்படையில் அஞ்சலி செலுத்தினர்.
ஆனால் இவரால் பதவி பெற்றவர்கள் , ஆட்சியில் இருப்பவர்கள், இ பி எஸ் -ஓ பி எஸ் கம்பெனியில் இருந்து ஒரு இரங்கல் செய்தி கூட இல்லை. கொடுமை என்னவென்றால் அதன் குரலாக செயல்படும் ஜெயக்குமார் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று சொன்னதுதான். எந்த தொண்டன் தமிழர் பண்பாட்டை கடைப் பிடிக்க வேண்டாம் என்று சொல்லுவான்? இவர்கள் எல்லாம் அமைச்சர்கள்?
சீமான் சொன்னது போல் இவர்கள் கீழே வாழ்வதே அச்சமாக இருக்கிறது.
விலங்குகள் கூட குறைந்த பட்ச தர்மத்தை கடைப் பிடிக்கும். மனித உருவில் வாழும் இவர்கள்?
This website uses cookies.