மிசாவில் ஸ்டாலின் கைது சிறுபிள்ளைத் தனமான பாண்டியராஜனின் குற்றச்சாட்டு?!

stalin dmk danabal

நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் இருக்க அமைச்சர் பாண்டியராஜன் திமுக தலைவர் முக ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டது அரசியல்  காரணங்களுக்காக அல்ல என்று பேசி யாரோயோ திருப்தி படுத்த முயற்சித் திருக்கிறார்.

1971 முதல் 1977 வரை அமுலில் இருந்த மிசாவில் லட்சக்கணக்கானவர்கள் கைது செய்யப் பட்டு சிறையில் வைக்கப் பட்டனர். இந்திரா காந்தியின் அப்பட்டமான  சர்வாதிகாரம் தலைவிரித்து ஆடிய காலம் அது. எதிர்க்கட்சிகள் சொல்லொணா தாக்குதலுக்கு ஆளானார்கள். அதில் திமுக தொண்டர்களும் தலைவர்களும் அடக்கம்.

அப்போது முக ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டார். அவர் சிறையில் மிருகத் தனமாக தாக்கப் பட்டிருக்கிறார். அவரைக் காப்பாற்ற முயன்ற சிட்டிபாபு என்ற திமுக தொண்டர் உயிர் இழந்தார். அந்த அளவு கொடுமை அரங்கேற்றப் பட்டது.

ஏறத்தாழ 45 ஆண்டுகளுக்குப்  பிறகு ஸ்டாலின் கைது தனிப்பட்ட காரணங்களுக்காக என்று அமைச்சராக இருக்கும் ஒருவர் பேசுவதில் ஏதாவது பொருள் இருக்கிறதா?

ஆதாரங்களை திரட்டிக்  கொண்டிருக்கிறாராம் இரண்டு நாளில் வெளியிடுவாராம். பொன்முடி சொல்லவில்லை. இரா செழியன் சொல்லவில்லை என்பதால் மிசாவில்  கைது ஆகவில்லை என்று ஆகி விடுமா? அப்போது ஸ்டாலின் தலைவரின் மகன் என்றாலும் சாதரண தொண்டர் என்பதால் சிலர் குறிப்பிடாமல் விட்டிருக்கலாம்.

பாண்டியராஜனுக்கு துறை சார்ந்து செய்ய வேண்டிய வேலைகள் ஏராளம் இருக்கின்றன. இது போன்ற அசட்டுத் தனங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு உருப்படியாக செயல் பட்டால் நல்லது.