தமிழக அரசியல்

ஆர்எஸ்எஸ்-ன் அடுத்த குறி தமிழ்நாடு!! தப்புவார்களா தமிழர்கள்??!!

Share

அடுத்த ஐந்து ஆண்டுகள் தமிழ்நாட்டுக்கு சோதனைக் காலம்தான்.

அகில இந்தியாவிலும் ஆர்எஸ்எஸ் இன் பிடியில் சிக்காத மாநிலமாக தமிழ்நாடு மட்டுமே எஞ்சி இருக்கிறது.

தென்னகத்திலும் கூட கேரளாவில் இடங்கள் கிடைக்கவில்லையே தவிர பத்து சதம் வாக்கு வங்கியை பெற்றுவிட்டது.

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தும் கணிசமாக வெற்றி பெற்றுவிட்டது.    காங்கிரஸ் ஆட்சியையும் கலைக்க முயன்று கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் பாஜக தலைவர்களை சென்று பார்த்து வந்து  கொண்டிருக்கிறார்கள். அநேகமாக ஆட்சி நிலைக்காது என்பதே இன்றைய செய்தி.    காங்கிரஸ் ஆட்சியை கலைக்க எடியூரப்பா எதையும் செய்வார்.

தெலுங்கானாவில் சந்திரசேகர ராவின் மகள் கவிதா தோற்றுவிட்டார். அங்கே எட்டு இடங்களை பாஜக வென்று டிஆர்எஸ் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்திருக்கிறது பாஜக.

ஆந்திராவில் ஜகன் மோகன் ரெட்டி வெற்றி பெற்றாலும் அவர் பாஜகவுடன் உறவாடி வருகிறார். அங்கேயும் பாஜக எதையும் சாதித்துக் கொள்ள முடியும்.

கிறிஸ்தவ மாநிலங்கள் ஆன வட கிழக்கில் பாஜக வலுவாக காலூன்றி விட்டது.    காங்கிரஸ் கட்சியை அப்படியே கபளீகரம் செய்து தனதாக்கி கொண்டு ஆட்சிக்கு வந்து விட்டது  பாஜக. கட்சி தாவல் களை பாஜக அளவுக்கு வேறு யாரும் வெளிப்படையாக ஊக்குவித்தது இல்லை. கொஞ்சமும் வெட்கப்படாமல் கட்சித்  தாவல்களை உருவாக்கி காங்கிரசை விரட்டி விட்டு அந்த இடத்தில அமர்ந்து  கொண்டது பாஜக. இதற்காக பாஜக திட்டமிட்டது இருபது ஆண்டுகளுக்கு முன்.

ஆர்எஸ்எஸ் பிரச்சாரர்கள் கடுமையாக உழைத்தார்கள். மேகாலயாவில் கிறிஸ்தவ ஆட்சியை அமைப்போம் என்று உறுதி கூறும் அளவுக்கு சென்றார்கள். எதிரிகளை வீழ்த்த எந்த ரூபத்தையும் எடுக்கும் பாஜக.

         குப்தர்கள், மௌரியர்கள், அசோகர், முகலாயர்கள் போன்ற எல்லா சாம்ராஜ்யங்களும் விந்திய மலைக்கு கீழே வந்ததில்லை. இப்போதும் கூட மோடியின் பாஜக சாம்ராஜ்யம் தமிழ்நாடு தவிர எல்லா இடங்களையும் கைப்பற்றிவிட்டது. 

விட்டு விடுவார்களா சனாதனிகள்? விடவே மாட்டார்கள்!!

சாம பேத தான தண்டம் என்று அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்துவார்கள். 

எனவே தற்காத்துக் கொள்ள கடும் போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும் தமிழினம்.

ஆட்சிக்கு வந்திருக்கும் மோடி புதிய இந்தியாவை படைக்க இருப்பதாக கூறுகிறார்.  

             மாநிலங்களின் தனித் தன்மைகளை பாதுகாப்போம் என்று ஆள வந்திருக்கும் பாஜக சமரசம் செய்து கொண்டால் ஒருவேளை போராட வேண்டிய அவசியம் இராது. நம்ப முடிய வில்லையே?

நம்பிக்கை இழக்க கூடாத அதே வேளையில் எச்சரிக்கை உணர்வும் தேவை என்பதை மறக்க கூடாது.

                  வரும் மாதங்களில் எந்த கட்சி உடையுமோ யார் யார் கட்சி மாறுவார்களோ என்பதை எல்லாம் வைத்துதான் பாஜக வின் / ஆர்எஸ்எஸ் சின் அரசியல் சித்து விளையாட்டு எந்த அளவுக்கு இருக்கப்போகிறது என்பதை கணிக்க முடியும். 

எதற்கும் தயாராக இருப்போம். எச்சரிக்கையுடன் இருப்போம்.

This website uses cookies.