வென்று வருகிறது பார்ப்பனீயம் !
அலையென வந்த திராவிட சுயமரியாதை இயக்க வெற்றிகளுக்குப் பின் கலைஞர் ஒருவர்தான் கொள்கைகளை அடகு வைக்காமல் அரசியல் வெற்றிகளை பெற்று வந்தார்.
அவருக்கும் எம்ஜியாருக்கும் வந்த தனிப்பட்ட போட்டியில் எம்ஜியாருக்கு பார்ப்பனீயம் வெண்சாமரம் வீசியது. கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்று வந்தாரே தவிர பெரியாரையோ சுயமரியாதை கருத்துக்களையோ புறந்தள்ளி அவர் அரசியல் செய்யவில்லை. ஆனால் சுயமரியாதை கருத்துகளை அதிகம் வலியுறுத்தாமல் பார்ப்பனர்களின் நம்பிக்கையை பெற்றவர் அவர்.
அவருக்கு அடுத்து வந்த ஜெயலலிதா தான் பாப்பாத்தி என்று சட்ட மன்றத்திலேயே தன் அடையாளத்தை வெளிப்படுத்தியவர். பஞ்சாங்கம் பார்த்து அரசியல் செய்த அவர் பார்ப்பனீயத்தின் பிரதிநிதியாகவே நடந்து கொண்டார். ஆனால் அதே சமயம் தான் பெரியாரின் பிறந்த நாளுக்கு மாலை இடுவதை மட்டும் நிறுத்த வில்லை. அதாவது சுமரியாதை இயக்கத்தை நீர்த்துப் போகச் செய்தால் போதும் எதிர்த்தால் எதிர்ப்பு உருவாகும் என்று பயந்தார்.
ஆக கலைஞருக்குப் பின் எம்ஜியாரையும் ஜெயலலிதாவையும் வைத்து தங்கள் கொள்கைகளை நிறைவேற்றிக் கொண்ட பார்ப்பனீயம் அடுத்து யாரை கொண்டு வருவது என்று திட்டமிட்டு தேர்ந்தெடுத்தது கமல் அல்லது ரஜினி .
எப்பாடு பட்டாவது ஸ்டாலின் வருவதை தடுப்பது. அன்புமணி, சீமான் , தினகரன் போன்றவர்கள் வரமுடியாது. ஓ பி எஸ் -இ பி எஸ் இருவரும் காகிதப் புலிகள். ஆண்மையற்ற தலைவர்கள் என்று குருமூர்த்தி அவர்களை இழிவு படுத்தியதை கண்டு மற்றவர்கள் கொதித்தார்களே தவிர அவர்களுக்கு சொரணையே இல்லை.
வெற்றிடம் உள்ளது. அதை தங்கள் பிரதிநிதி நிரப்ப வேண்டும் என்ற பார்ப்பனீயத்தின் வெளிப்பாடே ரஜினியின் அரசியல் அறிவிப்பு.
கமல் அறிவிப்புகள் அவ்வளவாக போது மக்களை ஈர்க்க வில்லை. இருவரும் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது.
மன்றத்தை மட்டும் பலப்படுத்த தனி கணினி வசதி.
ரஜினிக்கு அடுத்த ஆள் யாரும் அடையாள படுத்தப் படவில்லை.
புல்லுருவி மணியன், அர்ஜுன் சம்பத் போன்ற பெயர் தெரிந்த சிலர் ஆதரவு அளித்து இருக்கிறார்கள்.
ஒரு தனி மனிதனை நம்பி , அதாவது தன்னை மட்டும் நம்பி , ஆட்சியை கொடுங்கள் என்று கேட்கிறார்.
ஆன்மிக அரசியல் என்கிறார். அதே சமயம் சாதி மத வேறுபாடு பார்க்க மாட்டேன் என்கிறார். பாராளுமன்ற தேர்தலில் அப்போது சொல்வாராம். சட்ட மன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியாம்.
பகவத் கீதையை மேற்கொள் காட்டியவருக்கு திருக்குறள் தெரியவில்லை.
நல்லதையே நினைத்து நல்லதையே சிந்தித்து நல்லதையே திட்டமிட்டு செயல்பட்டால் நல்லதே நடக்கும். அதுதான் இவர் கொள்கையாம். எல்லா சாமியார்களும் சொல்லும் வாக்கியம் தானே.
மூன்று ஆண்டுகள் கழித்து வரப்போகும் சட்ட மன்ற தேர்தல் முன்கூட்டியே வராது என்பது இவருக்குதெரியுமா? பெரும்பான்மை இல்லாமல் நடக்கும் ஆட்சிக்கு எந்த பங்கமும் வராது என்ற உத்தரவாதத்தை யார் இவருக்கு அளித்தார்கள்?
எந்த காரணத்தை கொண்டும் பா ஜ க வுடன் ஓட்டோ உறவோ கொள்ள மாட்டேன் என்று அறிவிக்க தயாரா?
சீமான் சொல்வது போல் மராட்டியர்கள் முன்பு படை எடுத்து வந்து வெற்றி பெற்று நம்மை ஆண்டார்கள். இப்போது படம் எடுத்து புகழ் பெற்று ஆள திட்டம் இடுகிறார்கள். அதற்கு பார்ப்பனீயம் தூபம் காட்டுகிறது.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அந்த உரிமை ரஜினிக்கும் இருக்கிறது. ஆனால் அது சுயநலம் இல்லாமல் இருக்க வேண்டும். யாருடைய அம்பாகவோ செயல் பட கூடாது.
மூன்று ஆண்டுகள் இவர் எந்த பிரச்னை குறித்தும் எதுவும் பேச மாட்டார். பேசினால்தான் யார் என்று தெரிந்து விடுமே.
இதுவரை எல்லாராலும் நேசிக்கப் பட்ட ரஜினி இனி எதிரிகளையே சந்திப்பார்.
அதாவது இவர் யார் பக்கம் என்று தெரியும் வரை. நோட்டாவுக்கு குறைவாக வாக்குகள் வாங்கிய கட்சியுடன் வெளிப்படையாக உறவு வைத்து தன் சுய ரூபத்தை காட்ட மாட்டார். மாறாக மறைந்திருந்து தாக்குவார்.
தமிழர்கள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தீபாவும் மாதவனும் கட்சி ஆரம்பித்த போது கூட எல்லா ஊர்களிலும் பிளக்ஸ் போர்டு வைத்து ஆராதித்த தமிழர்கள் ஏராளமானவர்கள் இருந்தார்களே!
சிஸ்டம் சரியில்லை என்று இவர் எதை சொல்கிறார் என்பதே யாருக்கும் புரியவில்லை.
ஓ பி எஸ் – இ பி எஸ் மற்றும் பா ஜ க கட்சிகளுடன் இவர் உடன்பாடு செய்து கொள்வார் என்பதே இப்போதைய அனுமானம்.
ரசிகர் மன்றங்களுக்கு இடம் கொடுத்த தவறுக்கு தமிழகம் இன்னும் எத்தனை விலை கொடுக்க வேண்டி இருக்கும். ?
வருகிறவன் எல்லாம் ஆளத்தான் விரும்புகிறான்.
நல்லது செய்ய விரும்புகிறவன் வேறு வகையில் செய்யவே முடியாதா? நல்லதை சொல்லு நல்லவனை தேர்ந்தெடு நல்லவனுக்கு ஆதரவு கொடு அவனை ஆய்வு செய்யும் உரிமையை நீயே வைத்துக் கொள். இப்படி சிந்தித்தால் நீ நல்லவன்.
நான் மட்டுமே நல்லவன் என் பின்னால் எல்லாரும் வாருங்கள் என்பவன் அயோக்கியன்.
ரஜினி நல்லவரா? அயோக்கியரா?