உச்ச நீதிமன்றம் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க மறுத்துவிட்டது
ஒரு அரசியல் கட்சியாக கூட தன் அமைப்பை பதிவு செய்யாமல் எப்படி தேர்தல் கமிஷன் தன் கட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்று தினகரன் எதிர்பார்க்கிறார் என்பது தெரியவில்லை.
ஒரு இடைத் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் போதுமா?
டெல்லி உயர் நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கும் இரட்டை இல்லை வழக்கை நான்கு வாரத்துக்குள் முடிக்க சொல்லியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
23 /11/2017 அன்று தேர்தல் கமிஷன் ஒபிஎஸ் – இபிஎஸ் இருவரின் மனுக்களை ஏற்று அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கியது. அதை எதிர்த்து தினகரன் தொடுத்த வழக்கு தான் டெல்லி உயர்நீதி மன்றத்தில் விசாரணையில் இருக்கிறது.
இருவரின் இணைப்பும் மோடியால் அறிவுறுத்தப் பட்டு அமுலுக்கு வந்ததை ஒ பி எஸ் உறுதிபடுத்தி இருக்கிறார். ஆனால் அஇஅதிமுக வின் சட்ட திட்டப்படி அதன் பொதுக்குழுவே விதிகளை மாற்றும் அதிகாரம் கொண்டது. இல்லாத ஒருங்கிணைப்பாளர் -இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளை ஏற்படுத்தியது அஇஅதிமுக தொண்டர்களை கட்டுப்படுத்தாது என்று கே.சி.பழனிச்சாமி போன்றோர் இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இரட்டை இலை தீர்ப்பு தேர்தலுக்கு முன்பே வந்துவிடும். அதன் தாக்கம் எப்படியும் இரு தரப்பிலும் எதிரொலிக்கும்.
சின்னத்துக்காக சண்டை இடுபவர்கள் தமிழ் நாட்டின் உரிமைக்காகவும் மத்திய அரசுடன் சண்டையிட்டால் நாட்டுக்கு நல்லது.