தமிழகத்தில் என்பிஆர் தொடங்காதாம்? எடப்பாடியின் பயமும் கவலையும்?

eps-edappadi
eps-edappadi

சென்சஸ் சட்டம் 1948 ன் படி ஒவ்வொரு பத்து ஆண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது. 1872 ஆண்டு முதல் நடைபெற்று வரும்  இந்த நடைமுறை ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டது. இதன் படிதான் இந்தியாவின் மக்கள் தொகை  கணக்கெடுப்பு  ஏற்கப் படுகிறது. இதில்தான் மிக விரிவாக கேள்விகள் கேட்கப்படும்.

இது தொடர்ந்தால் ஒரு குழப்பமும் இல்லை.

இந்திய குடியுரிமை சட்டம் 1955 அடிப்படையில் ஒரு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்து அதன் அடிப்படையில் இந்திய குடியுரிமை நிர்ணயிக்கப்படும் என்று வரும்போதுதான் அது பிரச்னைக்கு உள்ளாகிறது. ஏனென்றால் இந்த கணக்கெடுப்பில் யாருடைய குடி உரிமையாவது சந்தேகமாக இருந்தால் அவர்கள் சந்தேக பட்டியலில் வைக்கப்படுவார்கள் என்ற பயம் ஏற்பட வழி வகை அதில் இருந்ததுதான்.

இத்தனை குழப்பங்களுக்கு காரணமான அந்த சந்தேக பிரிவை அகற்றி விட்டால் பிரச்னை தீர்ந்து  போகும் அல்லவா? அதை நீக்காமல் உள்துறை அமைச்சர் வெறும் உத்தரவாதம் மட்டும் அளித்தால் அது போதுமா?

அமித் சா இரண்டுக்கும் இடையே ஒரு தொடர்பும் இல்லை என்கிறார். யாருடைய குடிஉரிமையும் பறிக்கப்படாது என்று உறுதி அளிக்கிறார்.

ஏன் இந்த வெற்று உறுதி ? சந்தேக பிரிவை நீக்கிவிடுகிறோம் என்று அறிவிக்க என்ன தயக்கம்?   இந்த தயக்கம் மேலும் பயத்தை அதிகம் ஆக்கும்.

சென்சஸ் சட்டப்படி எடுக்கப்படும் விபரங்களை ஏன் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்கு போதுமான விளக்கம் இல்லை. 

சென்சஸ் சட்ட விபரங்கள் பொதுவெளியில் கிடைக்கும் ஆனால் என்பிஆர் விபரங்கள் கிடைக்காது என்பதும் அச்சத்தை அதிகரிக்கும் அம்சம்.

மத ரீதியில் மக்களை பாகுபடுத்தி முஸ்லீம்களை நாடற்றவர்கள் ஆக்குவீர்கள் என்பதுதான் உங்கள் மீது இருக்கும் சந்தேகம். நீங்கள் செய்வதும் அதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில்தான் இருக்கிறது. 

உங்கள் மீது மக்களுக்கு இருக்கும் சந்தேகம் உண்மை. நீங்கள் சொல்வது ஒன்று செய்வது வேறாக இருக்கும்.

தமிழக அரசு நாங்கள் சில விளக்கம் கேட்டிருக்கிறோம் அது வரும் வரை இங்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்காது என்று சொல்கிறது. அதற்கு ஒரு சட்டமே இயற்றி இருக்கலாமே ? ஏனைய மாநிலங்கள் இப்படி சட்டம் இயற்றியபோது அது மத்திய சட்டத்தை மீறியது என்பது தெரியாமலா இயற்றினார்கள்?

மாநிலங்கள் ஒத்துழைப்பு இல்லாமல் மத்திய  அரசு செயல்பட முடியாது என்பதை வேறு எப்படி  நிரூபிப்பது?

எடப்பாடிக்கு  சட்டத்தை அமுல்படுத்தி மக்கள் வெறுப்பை சம்பாதிக்க வேண்டி வருமே என்ற கவலை. அமுல்படுத்த முடியாது என்று சட்டம் போடவும் பயம். இரண்டுக்கும் இடையில் இப்போதைக்கு  இல்லை  விளக்கம் கேட்டிருக்கிறோம் என்று காலம் கடத்துகிறார்கள் .

மாநில அரசு கேட்கும் அந்த மூன்று அம்சங்களை  பொறுத்து மத்திய அரசு விளக்கம் அளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ?