தமிழக அரசியல்

ஏலம் போடப்படும் பஞ்சாயத்து தலைவர் பதவிகள்?

Share

உள்ளாட்சி தேர்தல் வந்தாலும் வந்தது. அரசியல் வியாபாரிகளுக்கு கொண்டாட்டமாக போய்விட்டது.

தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வாக்குகளை பெற்று வெற்றி பெறுவதை விட சுலபமான வழி ஊரில் உள்ளவர்களை சரிக்கட்டி பதவியை ஏலத்துக்கு விடச்செய்து காசைக்கொடுத்து பதவியை விலைக்கு வாங்கி விடுவது என்று கண்டுபிடித்து அமுல் படுத்தவும் துவங்கி விட்டார்கள்.

கடலூர் பக்கத்தில் ஒரு ஊராட்சி தலைவர் பதவியை அதிமுக முன்னாள் தலைவர் ஒருவர் ஐம்பது லட்சத்துக்கும் துணைத் தலைவர் பதவியை தேமுதிக தலைவர் ஒருவர் பதினைந்து லட்சத்துக்கும் ஏலம் எடுத்திருக்கிறார்கள்.

பத்திரிகைகளின் வந்தபின் எனக்கு ஏது அவ்வளவு பணம் என்று அதிமுக பிரமுகர் மறுத்தாலும் உண்மை விளங்கிவிட்டது.

இனி பதவிகள் பணத்துக்குத்தான் என்று.

தேனி மாவட்டம் அய்யம்பட்டியில் பஞ்சாயத்து தலைவர் தேர்தல் ஏலம் விடப்பட்டு பணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டதால் இப்போது அதே தொகைக்கு விடுவதா அல்லது புது ஏலம் விடுவதா என்று விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தர்மபுரி மாவட்டம் பனைகுளம்பஞ்சாயத்து தலைவர் பதவியும் இருபத்தி  ஐந்து லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டதாக தெரிகிறது.

நாமக்கல் மாவட்டம் பெரமாண்டம் பாளையம் பஞ்சாயத்து தலைவர் பதவியை ஒருவர் இரண்டு லட்சத்து நாற்பத்தி ஐந்து லட்சத்துக்கு ஏலம் போயிருக்கிறது.

விருத்தாசலம் அருகே பிஞ்சனூர் பஞ்சாயத்து தலைவர் பதவி பதினாறு லட்சத்துக்கு  ஒருவர் ஏலம் எடுத்துள்ளாராம்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலம்பாடி ஊராட்சி தலைவர் பதவியும் இருபத்தி  ஐந்து  லட்சத்துக்கு கேட்கப்பட்டு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.

ஒரு ஊராட்சியில் ஏலம் விடுவதை தட்டிக் கேட்ட ஒருவர் அடித்துக் கொலை செய்யப் பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வந்திருக்கிறது.

இது பற்றியெல்லாம் மாவட்ட ஆட்சியர் விசாரணை  நடத்தி அறிக்கை தர கோரப்பட்டுள்ளதாக தகவல் வந்தாலும் அது எந்த அளவு பயன்படும் என்பது  தெரியவில்லை.

மக்களாட்சியை கேலிக்குள்ளாக்கும் இத்தகைய ஏலங்கள் நிறுத்தப்பட்டால்தான் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் பொருள் இருக்கும்.

முடியாவிட்டால் அதிகாரபூர்வமாகவே பதவிகளை ஏலத்தில் விட்டு விடுங்களேன் .

தேர்தல் நடத்தும் செலவாவது மிஞ்சும்.

This website uses cookies.