பணபலத்தை முறியடித்த மக்கள் சக்தி? உள்ளாட்சி தேர்தல் தரும் செய்தி?

election-commission
election-commission

பெரிய சட்ட போராட்டத்திற்குப் பிறகு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் திமுக அணி மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது.

ஆட்சியில் இருந்தும் கூட தேர்தல் கமிஷன் அனுசரணை இருந்தும் கூட பணத்தை அள்ளி இறைத்தும் கூட அதிமுக அணியினால் முழு வெற்றியை பெற முடியவில்லை.

அதிமுக வாக்கிற்கு ஆயிரம் கொடுத்தது. திமுகவும் ஐநூறு கொடுத்ததாக சொல்கிறார்கள். உண்மை என்ற வைத்துக்  கொண்டால் கூட அதிமுகவிடம் அதிகம் பணம் வாங்கினாலும் திமுக குறைவாக கொடுத்தாலும் அவர்களுக்கு வாக்களிக்கிறார்கள் என்றால் என்ன பொருள்? பணம் மட்டுமே காரணி அல்ல. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்களோ              அவர்களுக்குத்தான் வாக்கு.

அதுதான் ஜனநாயகத்தின் வெற்றி.

பல விசித்திரங்களை இந்த தேர்தல் முடிவுகளில் பார்க்க முடிகிறது.

இரு மனைவிகளையும் ஒருவர் தேர்தலில் நிறுத்தி வைத்து வெற்றி பெற வைக்கிறார்.  ஒரு 79  வயது மூதாட்டியும் 21 வயது மாணவியும் சுயேட்சையாக நின்று வெற்று பெறுகிறார்கள். சம வாக்குகள் வாங்கியவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் வெற்றி பெறுகிறார். எதிர்காலம் இனி இல்லை என்ற தினகரன் கட்சி  94 ஒன்றிய குழு இடங்களில் வெற்றி பெற்றதுடன் பல இடங்களில் அதிமுகவின் வெற்றியை தடுத்திருக்கிறது. நாம் தமிழர் கட்சி தனித்து களம் கண்டு ஒரு இடத்தில வென்று கணக்கை தொடங்கி இருக்கிறது.

அதிமுக பெற்ற வெற்றிகளுக்கு பண பலம் காரணம் என்றால் திமுக பெற்ற வெற்றிகளுக்கு பண பலம் காரணம் யாருமே சொல்ல வில்லையே ஏன்?

இனி நகர்ப புற உள்ளாட்சி தேர்தல் களை நடத்த அதிமுக அரசு முன்வருமா என்றது சந்தேகமே.

நீதிமன்றம் தலையிட்டு ஆணையிட்டால் வேறு வழியின்றி ஒருவேளை நடத்தலாம்.    அதற்கும் ஏதாவது காரணங்களை தேடிக் கொண்டிருப்பார்கள்.

இந்த தேர்தலில் கடந்த  ஒருமாதமாக அரசு யந்திரம் முழுவதுமாக முடங்கிவிட்டது.    எல்லாம் தேர்தல் வேலை. அமைச்சர்கள் எல்லாரும் தேர்தல் வேலை பார்த்துக்  கொண்டிருந்தால் எப்படி அரசு இயங்கும்?

இனி நகர்ப்புற தேர்தல் விடுபட்ட ஒன்பது மாவட்ட ஊரக தேர்தல் என்று வருடம் முழுதும் தேர்தல் நடத்திக் கொண்டே இருப்பார்களா?

ஒன்று மட்டும் உறுதி. பணம் விளையாட வில்லை என்று சொல்ல முடியாதுதான். ஆனால் இனி பணத்தை இறைத்து மட்டும் வெற்றி பெற்று விடலாம் என்ற நிலையை இந்த தேர்தலில் மக்கள் மாற்றி விட்டார்கள்.

அந்த வகையில் மக்கள் சக்திக்கு வெற்றிதான்.