நகராட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது தி மு க அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் மற்றும் கண்காணிப்பு ஆணையருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
அதில் பல்வேறு குற்றச்சாட்டுகள்.
அவரது துறை சார்ந்த வேலைகளுக்கான டெண்டர்கள் அவரது பினாமிகளுக்கு சட்ட விதிகளை மீறி முறைகேடாக பல கோடி ருபாய்களுக்கு வழங்கப்பட்டன என்பது குற்றச்சாட்டு.
அதற்கான பல புள்ளி விபரங்களை அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அவருடைய சகோதரர் உறவினர்கள் நண்பர்கள் எல்லாருக்கும் பல கோடி ரூபாய் டெண்டர்களை வாரி வாரி வழங்கி இருக்கிறார் வேலுமணி என்பது குற்றச்சாட்டு.
ஆனால் அதை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் அதற்கான முதல் தகவல் பதிவு எதையும் செய்யாமல் மேல் நடவடிக்கை எதையும் எடுக்காமல் தவிர்க்கிறார்கள் என்பது அடுத்த குற்றச்சாட்டு.
புகார் கொடுத்தால் ராஜினாமா செய்ய வேண்டுமா என்ன ? நீதிமன்றம் முடிவு செய்யும் வரை ராஜினாமா செய்ய மாட்டேன் என்பது முதல்வர் பழனிசாமி முதல் வேலுமணி வரை வாதம் செய்கிறார்கள்.
உண்மைதான். குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப் படும் வரை எல்லாரும் நிரபராதிகள்தான் .
கேள்வி என்னவென்றால் ஆதாரங்கள் கொடுக்கப் படும்போது , விசாரணை செய்ய வேண்டிய அமைப்பு நடவடிக்கை எடுக்காமல் இருக்கும்போது என்னதான் விடிவு?
அதற்கும் நீதிமன்றம் தலையிட்டு நேரடிக்கண்காணிப்பில் விசாரணை நடந்தால் தான் ஒப்புக் கொள்வார்களா?
DVAC மாநில அரசின் கீழ்செயல்படும் அமைப்பு. எப்படி மாநில அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்?
Tender Transparency Act ஏட்டில் மட்டுமே இருக்கும் ஒரு சட்டம். ஒரு துண்டுச்சீட்டு , அல்லது பென்சில் குறிப்பு போதும். டெண்டர் கிடைத்து விடும். இதுதான் நடைமுறை. இதை யார் மாற்றுவது?
இதற்கு என்னதான் விடிவு?
திமுக அமைச்சர்கள் மீது கொடுக்கும் நான்காவது ஊழல் புகார் இது.
அதிலும் அன்பழகன் என்ற ஒரு பத்திரிகையாளர் அமைச்சர் மீது ஊழல் புகார் கூறி மனு கொடுக்கிறார் ஏப்ரல் மாதம் 25 ம் தேதி. அதில் பார்த்திபன் என்பவர் அமைச்சரின் பலவீனங்களை பயன்படுத்தி தேன்வலை ( honey trapping ) முறையை பயன்படுத்தி சினிமா துணை நடிகைகளை பயன்படுத்தி அமைச்சரிடம் பணி மாறுதல் உத்தரவுகளை பெற்றார் என குறிப்பிடுகிறார். அதில் கோபமடைந்த பார்த்திபன் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி புகார் கொடுத்த அன்பழகனையே காவல் துறையை விட்டு முடக்குகிறார். பல பிரிவுகளில் அவர் மீது வழக்குகள் பதிவாகின்றன.
ஏன் இத்தனை அடாவடித்தனம்? குற்றம் செய்ய வில்லை என்றால் விசாரணைக்கு ஏன் தயங்க வேண்டும்?
முதல்வர், ஓ பி எஸ் , விஜயபாஸ்கர் வேலுமணி என்று அமைச்சர்கள் மீதுதொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப் படும் நிலையில் இந்த அரசு தொடர்வது என்ன நியாயம்.?
18 எம் எல் ஏக்கள் தகுதி இழப்பு வழக்கு முடிவுக்கு வந்தவுடன் இந்த அரசின் நாட்கள் எண்ணப்படும்.
அதுவரை இந்த குற்றச்சாட்டுகள் மக்கள் மன்றத்தில் விவாதிக்கப் பட்டு
நேரம் வரும்போது தீர்ப்பு சொல்ல பயன்படட்டுமே!!!
This website uses cookies.