காவிக் கட்சிக்கு கும்பிடு போட்ட ரஜினி?! தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறதாம்??!!

rajinikanth
rajinikanth

காவிக் கட்சிக்கு தாவப் போகிறார் என்ற வதந்திக்கு இன்று முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ரஜினி காந்த்.

அவர் என்றும் சூப்பர்ஸ்டார் ஆகவே நீடிக்க வேண்டும் என்பதுதான் அனைத்து தமிழர்களின் விருப்பம். எல்லாருமே அவர் ரசிகர்கள் ஆக கடந்த நாற்பது ஆண்டுகளாக நீடித்து வந்திருக்கிறார்கள். அவர்கள் எவருடைய மனதையும் நோகச்செய்யும் எந்தக் காரியத்தையும் அவர் செய்ய மாட்டார் என்பது நம்பிக்கை.

ஆனால் அது பொய்த்து விடும் போல் தெரிகிறது.

இன்று அளித்திருக்கும் பேட்டியில் இரண்டு விஷயங்களை தெளிவு படுத்தி இருக்கிறார். ஒன்று அவர்பாஜகவில் சேர மாட்டார். இரண்டாவது அவர் கட்சி ஆரம்பிக்கும் வரை நடிப்பார்.

அதாவது தமிழ் நாட்டில் தற்போது சரியான ஆளுமை மிக்க தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது என்கிறார். இதுதான் ஆபத்தான கருத்து.   

இது முக ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஒ பி எஸ்,  வைகோ, திருமாவளவன், மருத்துவர் ராமதாஸ்  உள்ளிட்ட எல்லாருக்குமே விடப்படும் சவால்.

அந்த வெற்றிடத்தை தான்தான் பூர்த்தி செய்ய சரியான ஆள் என்கிறாரா அல்லது அப்படிப்பட்ட ஆளுமையை உங்களிடம் அறிமுகம் செய்து வைப்பேன் என்கிறாரா?

திருவள்ளுவருக்கு காவி சாயம் பூச முயற்சித்ததைப் போல் தனக்கும் பூச முயற்சி நடந்து வருவதாகவும் அதில் தானும் சிக்க மாட்டேன் வள்ளுவரும் சிக்க மாட்டார் என்றார் ரஜினி.

திருவள்ளுவர் ஞானி சித்தர். அவரை எந்த சாதி மதத்துக்குள்ளும் அடைக்க முடியாது என்றும் கூறுகிறார் ரஜினி.

வள்ளுவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர் நாத்திகர் அல்ல என்றும் கூறியிருக்கிறார் மிகச்சரியாக.

ஆனால் வள்ளுவருக்கு காவி சாயம் பூச முயற்சிக்கும் பாஜக வை கண்டிக்க ரஜினிக்கு மனம் இல்லை என்பதும் தெளிவாக தெரிகிறது. அது அவர்களின் விருப்பம் என்கிறார். அதை பெரிது படுத்த வேண்டாம் என்கிறார். வேறு முக்கிய  பிரச்னைகள் இருக்கின்றன என்கிறார். ஒரு தவறான பிரசாரத்தை அதுவும் தமிழர்களின் அடையாளத்தை மாற்ற முனையும் காரியத்தை எப்படி விட்டு விட முடியும்?

அடுத்த படத்தையும் முடித்து விட்டு தனிக்கட்சி தொடங்குவார் ரஜினி என்பதுதான் இப்போதைய நிலவரம்.

அவர் வந்து என்ன செய்யப் போகிறார் என்பதைப் பற்றி எதுவும் சொல்லாமல் தான்தான் சரியான ஆளுமை என்பது மட்டுமே அவர் கொள்கையாக இருக்குமானால் அது தோல்வியில் தான் முடியும்!!

இன்று ரஜினி பேசியதும் காவிகள் வடிவமைத்துக்  கொடுத்த வசனங்களாக  இருக்குமோ என்ற சந்தேகமும் எழுவதை தவிர்க்க முடியவில்லை.                            ஏனெனில் ‘அரசியலில் வெற்றிடம்’ என்பது அவர்களுக்குத்தானே ஆதாயம்.    ‘ கழகங்கள் இல்லாத தமிழகம் என்றவர்கள் அவர்கள்தானே?