ஸ்டாலினுடன் அடாவடி சண்டை போடும் மருத்துவர் ராமதாஸ்?

mk-stalin-ramadoss
mk-stalin-ramadoss

அசுரன் படம் பார்த்து விட்டு முக ஸ்டாலின் வெற்றிமாறனையும் தனுஷையும் பாராட்டும் நோக்கில் இது படம் அல்ல பாடம் என்று கருத்து பதிவிட்டிருந்தார்.

காலம் காலமாக அடிமைப் படுத்தப்பட்டு வரும் ஒரு சமூகத்தின் தற்கால தலைமுறை எதிர்த்து நின்று போராடத் தயாராகி விட்டதை படம் உணர்த்துகிறது. இது காலத்தின் கட்டாயம்.

ஆனால் தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்து ஒருகாலத்தில் ‘தமிழ்க் குடிதாங்கி’ என்று திருமாவளவனால் பாராட்டப் பெற்ற மருத்துவர் ராமதாஸ் இப்போதெல்லாம் தலைகீழாக மாறிவிட்டார்.

எனவே படத்தின் கருத்துக்கு பாராட்டு தெரிவிப்பதற்கு மனமில்லாமல் பாராட்டிய ஸ்டாலினை சீண்டும் நோக்கில் நல்லது முதலில் உங்கள் முரசொலி ஆக்கிரமித்துள்ள பஞ்சமி நிலத்தை திருப்பி கொடுங்கள் என்று பதிவிட்டார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் ஸ்டாலின் முரசொலி தனியார் பட்டா நிலம் என்றும் அதன் பட்டா நகலையும் வெளியிட்டார். அதற்கு மீண்டும் மருத்துவர் ராமதாஸ் பட்டா 1985, ஆண்டில் வாங்கப்பட்டது. அதற்கு முன்பு யார் பெயரில் இருந்தது. முன்பு எப்படி அந்த இடத்தில் அரசு சார்பில் தாழ்த்தப்பட்டோர் விடுதி இயங்கியது என்று கேள்வி கேட்டுள்ளார். இப்படி டிவிட்டரில் நிலம் தொடர்பான விசாரணை நடத்துவது எந்த விதத்தில் சரி என்பதை மருத்துவர் ராமதாஸ்தான் சொல்ல வேண்டும்.

ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் என்றால் அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

அதிக காலம் ஆண்டது அதிமுகதான். அவர்கள் விட்டு விடுவார்களா? அண்ணா அறிவாலயம் இருக்கும் இடம் தொடர்பாக வழக்கு போட்டு ஜெயலலிதா அலைக்கழிக்கவில்லையா? அதேபோல் முகாந்திரம் இருந்தால் அரசுதான் இது தொடர்பாக விளக்கமோ நடவடிக்கையோ எடுக்க வேண்டுமே தவிர முறைகேடாக குற்றம் சாட்டுவது மருத்துவருக்கு அழகல்ல.

உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டு தொடரும் என்று ஜிகே மணி அறிவித்து இருப்பதன் மூலம் பாஜக விடம் இருந்து மருத்துவருக்கு சிக்னல் கிடைத்துவிட்டது தெரிகிறது. 

அரசியல் தரம் தாழ்ந்து விடாமல் பார்த்துக் கொள்வது முக்கியம்.