தேர்தல் கமிஷன் நடிகர் விஷால் , ஜெ .தீபா ஆகிய இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளது.
படிவங்கள் முறையாக பூர்த்தி செய்ய வில்லை என்பது தீபாவின் தவறு என சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. கடந்த தேர்தலில் முறையாக மனு செய்த தீபா இந்த தேர்தலில் ஏன் அப்படி செய்யவில்லை என்பதை அவர்தான் விளக்க வேண்டும். படிவம் சரியாக பூர்த்தி செய்யப் பட்டதா என்பதை தேர்தல் வழக்கில்தான் முடிவு செய்ய வேண்டுமா என்ன?
விஷால் மனுவில் முன் மொழிந்தவர்களில் மூன்று பேர் தாங்கள் அந்த மனுவை முன் மொழியவில்லை என்று முன்னுக்கு பின் முரணாக தேர்தல் அதிகாரி முன் சாட்சியம் அளிக்கிறார்கள். அவர்களை மதுசூதனன் ஆதரவாளர்கள் மிரட்டி வாக்குமூலம் வாங்கியதாக ஒரு ஆடியோ பதிவை விஷால் தேர்தல் அதிகாரியிடம் கொடுக்க அவர் அதை முதலில் ஒப்புக்கொண்டு மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கிறார். அதே அதிகாரி இரவு பத்தேகால் மணிக்கு விஷாலுக்கு தெரியாமல் அவர் முன்பு ஆஜராகி தாங்கள் அந்த மனுவை முன் மொழியவில்லை என்று சொல்கிறார்கள். அதை ஏற்றுக் கொண்டு விஷாலின் மனுவை அதிகாரி நிராகரிக்கிறார்.
தெலுங்கு பேசம் மக்களின் வாக்குகளை விஷால் பிரித்தால் தங்களுக்கு பாதகம் என்று அ தி மு க வின் மதுசூதனன் ஆதரவாளர்கள் திட்டமிட்டு விஷாலின் மனுவை தள்ளுபடி செய்ய வைத்து விட்டார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு.
இதற்கெல்லாம் தேர்தல் அதிகாரி துணை போனாரா என்பதெல்லாம் விசாரணையில்தான் தெரிய வரும்.
நடக்கிற சம்பவங்களை பார்க்கிற யாருக்கும் தேர்தலை நடத்த விட மாட்டார்களோ என்ற சந்தேகம் வருவது இயல்பு.
சென்ற முறை யும் கூட சில நாட்களுக்கு முன்புதானே தேர்தலை ரத்து செய்தார்கள்.
அப்போது தினகரன் பணம் கொடுத்து வெற்றி பெற்று விடுவார் என்ற பயம் இருந்தது. அதற்கு ஆதாரமும் இருந்தது.
இப்போதும் அது நடவாது என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை.
ஜனநாயகம் கேலிக்கூத்து ஆகிக் கொண்டிருக்கிறது.