ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேர் விடுதலை
இன்னும் தொங்கிக்கொண்டிருகிறது.
முடிந்து விட்டது போல் தெரிந்த விடுதலை இப்போது
காங்கிரஸ் நிலைப்பாட்டினால் மீண்டும் தொடரும் போல் தெரிகிறது.
உச்சநீதி மன்றம் தெளிவான தீர்ப்பு தந்து
அரசியல் சட்ட பிரிவு 161 ன் படி மாநில அரசே முடிவு செய்யட்டும் என்றது.
மாநில அமைச்சரவை கூடி விடுதலைக்கு ஆளுநருக்கு பரிந்துரை செய்தாகிவிட்டது.
ஏற்றுக் கொள்வதை தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை
ஏனெனில் அவர் பெயரளவில்தான் ஆட்சித்தலைவர்
அமைச்சரைவின் முடிவுக்கு கட்டுப் பட்டவர் ஆளுநர்
தனக்கென்று எந்த அதிகாரமும் கிடையாது
அவர் பா ஜ க வினால் நியமிக்கப்பட்டார் என்பதால்
மத்திய அரசின் கருத்தை கேட்க வேண்டிய அவசியமில்லை
ஆனால் என்ன செய்வார் பன்வரிலால் புரோஹித் ?
முடிவெடுக்காமல் சும்மா அமர்ந்திருக்கலாம்
அரசோ பாதிக்கப் பட்டவர்களோ மீண்டும் நீதிமன்றம் சென்று
ஆளுநருக்கு முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயிக்க கோரலாம்
கருணை மனு மீது முடிவெடுக்காமல் பதினோரு ஆண்டுகள்
கழித்ததால் தானே உச்சநீதி மன்றம் சிலரது மரண
தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழ்நாடு தலைவர்
ஈ வி கே எஸ் இளங்கோவன் சோனியாவும் ராகுலும்
மன்னித்து விட்ட பிறகு எங்களுக்கு என்ன ஆட்சேபணை சட்டம் தன்
முடிவை எடுக்கட்டும் என்றார். அப்போது தற்போதைய தலைவர்
திருநாவுக்கரசர் அபசுரம் வாசித்தார். அதாவது
தவறான முன்னுதாரணம் ஆகி விடும் என்றார்.
ஏன் இப்படி தப்பாக அவர் பேச வேண்டும் என்ற குழப்பம் வந்தது .
மறுநாள் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ தலைமை செய்தி தொடர்பாளர்
ரன்தீப் சுர்ஜெவாலா ‘ அவர்களை தண்டிக்கும் கடமையில் இருந்து
மாநில அரசு நழுவக் கூடாது’ என்று பேட்டி கொடுக்கிறார்.
காங்கிரசின் உண்மை சொரூபம் வெளியே வந்தது .
ராகுலை நிருபர்கள் கேட்டபோது ‘ நாங்கள் அவர்களை மன்னித்து விட்டோம் ‘
என்றாரே அது பொய்யா? நாங்கள் மன்னித்து விட்டோம் என்று சொல்லி
நல்ல பெயர் வாங்கி கொள்கிறோம் நீங்கள் ஆட்சேபணை செய்யுங்கள்
என்று இரட்டை வேடம் போடுகிறார்களா?
ராகுலுக்கு தெரியாமல் அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர்
இப்படி ஒரு கருத்தை தெரிவித்து இருக்க முடியுமா?
மாநில அரசின் கடமை பயங்கரவாதிகளை கண்டுபிடிப்பதா? பாதுகாப்பதா?
என்று கேட்கிறார் சுர்ஜெவாலா .
பிரச்னை மத்திய அரசின் கையிலும் சோனியா குடும்ப கையிலும் இல்லை
மாநில அரசின் பரிந்துரையை கேட்டே ஆக வேண்டிய ஆளுநரின் கையில்தான்
இருக்கிறது. ஆளுநர் தாமதித்தாலும் மறுத்தாலும் மாநில அரசு
தனது உரிமையை பாதுகாக்கும் பொருட்டு மீண்டும் நீதிமன்றம்
சென்று அவர்களை விடுவிக்க முடியும் என்பது உறுதி.
ஆனால் அதற்கு மீண்டும் கால அவகாசம் தேவைப்படும்.
ஆக பா ஜ க – காங்கிரஸ் இரண்டும் மாநில உரிமைகள்
அதிலும் குறிப்பாக தமிழக மாநில உரிமைகள் குறித்து
ஒரே நிலைப்பாட்டில் தான் இருப்பார்கள் என்பது புலனாகிவிட்டது.
நீதி அவர்களுக்கு தனிதான்.
தேசப்பிதா காந்தியை சுட்டுக் கொன்றவர்களை 14 ஆண்டுகளில்
விடுவித்தவர்களுக்கு இவர்களை 27 ஆண்டுகளுக்குப் பிறகும்
விடுவிக்க மனமில்லை என்றால் அதற்கு ஒரே காரணம்
இவர்கள் தமிழர்கள் என்பதும் அவர்கள் மேல்தட்டு மக்கள்
என்பதும்தானே? பார்ப்பான் கொன்றால் அவன் தலை மயிரை
சிரைத்து விடு மற்றவன் கொன்றால் தலையை வாங்கு என்று
மனு நீதி எழுதி வைத்தவர்கள்தானே ?
எல் என் மிஸ்ரா வழக்கு குற்றவாளிகள் மீதும் நாற்பது
ஆண்டுகளுக்கு மேல் வழக்கு முடியவில்லை என்பார்கள்.
அதற்கும் காரணம் இருக்கிறது.
மிஸ்ரா கொலை வழக்கில் குற்றம் சாட்டப் பட்டோர்
ஆனந்த மார்க்கம் என்ற மதப் பிரிவை சேர்ந்தவர்கள்
இந்து மதத்தை திசை திருப்பி பார்ப்பன ஆதிக்கத்துக்கு
ஊறு விளைவிப்போரை அவர்கள் எப்படி மன்னிப்பார்கள்?
அதுவும் கொல்லப் பட்டவர் பார்ப்பனர் அமைச்சர் . அதற்குப் பின்
அவரது சகோதரர் ஜகன்னாத் மிஸ்ரா முதல்வராக ஆகும்
அளவு செல்வாக்குப் பெற்றிருந்தவர்கள்.
இதேபோல்தான் நாற்பதாண்டு களுக்குப் பின் எல் என் மிஸ்ராவின்
மகன் விஜய் மிஸ்ரா தண்டிக்கப்பட்ட நால்வரும்
உண்மைக் குற்றவாளிகள் அல்ல என்று பேட்டி கொடுத்தார்.
சி பி ஐ விசாரணை மீது சந்தேகம் தெரிவித்த அவர் மீண்டும்
விசாரணை நடைபெற வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.
எல்லா சாட்சிகளும் மரணித்த பிறகு எப்படி விசாரணை சாத்தியம்
என்பதை அவர் விளக்க வில்லை. இதுதான் அவர்கள் நீதி.
எல்லா சூழ்ச்சிகளையும் மீறி
தமிழர்களின் நம்பிக்கையான
அறம் வென்றே தீரும்!!!