ஒரு வழியாக திமுக தன் கூட்டணியை இறுதி செய்து விட்டது. இருபது இடங்களை தனக்கு வைத்துக் கொண்டு மீதியை கூட்டணிக் கட்சிகளுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டது.
இதில் பாரிவேந்தரின் ஐஜேகே வைத்தவிர மற்றவர்கள் மத்தியில் பாஜக ஆட்சிக்கும் மாநிலத்தில் அதிமுக ஆட்சிக்கும் எதிரானவர்கள். பாரிவேந்தர் மட்டும் கடைசி வரையில் பாஜக வுக்கு ஆதரவாக இருந்து விட்டு அதிமுக பாமக-வுக்கு கொடுத்த முக்கியத்துவத்தில் அதிருப்தி ஆகி வெளியே வந்து திமுக கூட்டணியில் சேர்ந்து கொண்டது. அதுகூட கௌரவமாக திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக பேட்டி கொடுத்துவிட்டு கூட்டணி இடம் பற்றி ஏதும் பேசாமல் இரண்டு நாள் கழித்து திமுக அதற்கு கொடுத்த ஒரு இடத்தை ஒப்புக்கொண்டது.
அதிமுக அணியில் தலைமை பாஜகவா அதிமுக வா என்ற இழுபறி நீடித்தாலும் டெல்லிக்கு பாஜக தமிழ்நாட்டுக்கு அதிமுக என்று சமாளித்தார்கள்.
அதிலும் மோடி வந்த அன்று நடந்த கூத்து எல்லாரையும் முகம் சுழிக்க வைத்து விட்டது. திரைமறைவில் அரசியல் கட்சிகள் நடத்தும் பேரங்கள் ஒன்றும் புதிதல்ல. ஆனால் அதற்கும் ஒரு வரையறை இருக்க வேண்டும்.
ஒரே நேரத்தில் அதிமுகவோடும் திமுகவோடும் பேரம் பேசிய அரசியல் அவலத்தை கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி தேமுதிக தலைமை செய்தது.
ஒருவேளை விஜயகாந்த் முழு கட்டுப்பாட்டில் இருந்தால் இப்படி நடந்திருக்குமா என்பது தெரியவில்லை.
மோடி பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த், வாசன் படங்கள் அகற்றப்பட்டன.
ஆனால் இன்னமும் ஜெயக்குமார் தேமுதிகவிற்கு டிக்கெட் கொடுத்தாச்சு விமானத்தில் ஏற வேண்டியதுதான் பாக்கி என்று பேட்டி கொடுக்கிறார்.
ஒரு தேர்தல் என்றால் மத்திய மாநில அரசுகளைப் பற்றிய கருத்து முக்கியம் இல்லையா ?
மோடி மீண்டும் வரவேண்டுமா கூடாதா? மாநிலத்தில் இருக்கும் ஆட்சி நீடிக்க வேண்டுமா அகற்றப்படவேண்டுமா? இந்த இரண்டையும் பற்றி எந்தக் கருத்தையும் முன் வைக்காமல் கூட்டணி வைக்கும் யாரும் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றுதான் பொருள்.
சுதீஷ் அதிமுகவினருடன் பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் அனகை முருகேசனும் இளங்கோவும் திமுகவின் பொருளாளர் துரைமுருகனை பார்த்து பேசியது இன்றைய அரசியல் நிலவரம் எவ்வளவு தூரம் பாழாகி நிற்கிறது என்பதன் அடையாளம். மரியாதை நிமித்தமாக பேசினோம் என்று அவர்கள் சொல்ல அவர்களை யார் என்றே தெரியாது அவர்களுடன் அரசியல் தான் பேசினேன் என்று துரைமுருகன் சொல்ல விஜயகாந்த் கட்சியின் மரியாதை அதலபாதாளத்திற்கு போய்விட்டது.
போகிற போக்கை பார்த்தால் நான்கு இடங்களை அதிமுகவிடம் பெற்றுக் கொண்டு மௌநியாகி விடுவார்கள் என்றுதான் தோன்றுகிறது.
அவ்வளவு சுயமரியாதை இருந்தால் தனித்து நின்று பார்த்து விடவேண்டியதுதானே?!
யாருக்கும் வெட்கமில்லை என்ற சோவின் நாடக தலைப்புதான் நினைவுக்கு வருகிறது.