பாதி கிணறு தாண்டிய முதல்வரின் ஆயிரம் ரூபாய் பொங்கல் அன்பளிப்பு திட்டம் ?!

eps-pongal
eps-pongal

பொங்கலுக்கு அரிசி சர்க்கரை கரும்பு முந்திரி திராட்சை ஏலக்காய் மட்டும் கொடுத்திருந்தால் அரசுக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கும்.

எல்லா குடும்ப அட்டைகளுக்கும் ஆயிரம் ரூபாய் அன்பளிப்பு என்ற திட்டம் தொடங்கி பாதி கொடுத்திருந்த நிலையில் உயர்நீதி மன்றம் தலையிட்டு வறுமை கோட்டுக்கு மேலே இருப்பவர்களுக்கு கொடுக்கக் கூடாது என்று தடை விதிக்க அரசின் திட்டம் பாதி கிணறு தாண்டிய நிலையில் இருக்கிறது.

அதுவும் நீதிமன்றம் தமிழக அரசின் நிதி நிலையை சுட்டிக் காட்டி அரசின் பணம் எந்த அளவுகோலும் இல்லாமல் இப்படி விரயம் செய்யலாமா என்று கேட்டது அரசுக்கு தர்ம சங்கடத்தை உருவாக்கி விட்டது.

நியாயப்படுத்த முடியாத அரசு நீதிமன்றத்தில் தடுமாறியது. பாராளுமன்ற தேர்தலையும் வர இருக்கும் இடைத்தேர்தல்களையும் அரசு மனதில் கொண்டு இந்த அன்பளிப்பு திட்டத்தை உருவாக்கி இருக்கலாம். மக்களுக்கு உண்மை தெரியாதா என்ன?

இன்று நீதிமன்றம் தடை கொடுத்த பின்பும் எங்களுக்கு உத்தரவு நகல் வரவில்லை என்று சொல்லிக்கொண்டு பொங்கல் பரிசுப் பொருட்களோடு ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள் கடை அலுவலர்கள். நாளை என்ன செய்வார்களோ?

தடை கொடுத்த நீதிமன்றம் இனி என்ன செய்யும்?

பாதி கொடுத்திருந்த நிலையில் தகுதி இல்லாதவர்கள் பெற்றிருந்தால் எப்படி திரும்ப பெறுவது? தகுதி இல்லாதவர்களில் எப்படி பாகுபாடு பார்த்து தவிர்ப்பது என்று ஊழியர்கள் திண்டாடி போனார்கள்.

அதிலும் பல கடைகளின் ஆறு பொருட்களுக்கு பதில் ஐந்து பொருட்களே கொடுத்தார்கள். கரும்பு வெட்டிதர ஆள் இல்லையாம். வந்தது வரை லாபம் என்று யாரும் புகார் கொடுக்க தயராக இல்லை.

ஏற்கெனெவே நடப்பு நிதி ஆண்டில் 25,000 கோடி பற்றாக்குறையில் திண்டாடும் அரசு இந்த இரண்டாயிரம் கோடி செலவில் பாதியை மிச்சப் படுத்தி இருக்கலாம்.

நல்ல பெயர் வாங்கி கொடுத்திருக்க வேண்டிய அன்பளிப்பு திட்டம் எடப்பாடிக்கு மேலும் கெட்ட பெயரையே வாரித் தந்திருக்கிறது.