எதிர்பார்த்ததை போலவே தமிழ்நாட்டின் பல இடங்களிலும் ஓட்டுக்கு ரூபாய் 300 விநியோகம் தொடங்கி விட்டதாக செய்திகள் வர தொடங்கி உள்ளன.
இதில் எந்த அளவு உண்மை என்பதை தேர்தல் ஆணையம்தான் உறுதிபடுத்த வேண்டும்.
எல்லாம் முடிந்தபிறகு எங்களால் பண விநியோகக்தை தடுக்க முடியவில்லை என்று அறிக்கை வெளியிடுவதால் எந்த பயனும் இல்லை.
ஜெயலலிதா பணம் கொடுத்துதான் வெற்றி பெற்றார் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் அதை நிரூபிக்க முடியவில்லை.
ஆனால் 2016ல் திமுகவினரிடம் இருந்து 1% வித்தியாசத்தில் வெற்றியை தட்டிப் பறிக்க தமிழ்நாடு முழுதும் அதிமுக வேட்பாளர்களுக்கு 650 கோடிக்கும் மேலான ஊழல் பணத்தை எஸ் ஆர் எஸ் மைனிங் என்ற கம்பெனி மூலம் விநியோகம் செய்துள்ளதற்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் வருமான வரித்துரையிடம் கிடைத்துள்ளதாக இன்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதற்கு ஆதாரமாக ஆங்கில இதழ் ஒன்று வெளியிட்டிருக்கும் தகவல்களை அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
எல்லா தகவல்களையும் 9.5.2017 அன்றே வருமான வரித்துறையின் முதன்மை இயக்குனர் அத்துறையின் டைரக்டர் ஜெனரலுக்கு அனுப்பி அதை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கும்படி கேட்டிருக்கிறார்.
ஆனால் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதெல்லாம் இதுவரை வெளிவராத மர்மங்களாகவே இருக்கின்றன.
எனவே இப்போது வெளிவரும் செய்திகளை வெறும் வதந்திகள் என்று புறந்தள்ளி விடமுடியாது.
பொதுமக்கள் கண்காணிப்பும் வேண்டும். அதிகாரிகளின் கண்டிப்பான நடவடிக்கையும் வேண்டும் .
ஓட்டுக்குப் பணம் என்பது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி விடும். வரும் மூன்று நாட்கள் தமிழர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் நாட்கள் என்பதால் எச்சரிக்கை தேவை என்பதை பொதுமேடை கவலையுடன் பதிவு செய்கிறது.