தீக்குளித்த விக்னேஷுக்கு வீர வணக்கம்??!! தொடர வேண்டாம் இந்த கொடூரம்??!!!

Share

கன்னட வெறியர்களை கண்டித்து நடந்த முழு அடைப்பின் போது நாம் தமிழர் கட்சியின் தொண்டர் விக்னேஷ் சென்னையில் தீக்குளித்து மாண்டிருக்கிறார் .

ஈழத் தமிழர்கள் படுகொலையின் போது உயிராயுதம் ஏந்தி மாண்ட முத்துக்குமார் அவருக்குப்பின் இருபது தமிழர்கள் நினைவுக்கு வருகிறார்கள்.   மாள்வதா தமிழர் பண்பு என்ற ஏக்கம் தவிர்க்க இயலவில்லை.

ஜெயலலிதா சிறைக்குப் போனபோது மாண்டார்களே இருநூறு பேர் அவர்களை எந்தக் கணக்கில் சேர்ப்பது. ?

உச்சநீதி மன்றம் தந்த தீர்ப்பையே மதிக்காதவர்கள் எப்படி தீர்வை நோக்கி நகர்வார்கள்.?     ஆனாலும் ஒரு நூற்றாண்டைத் தாண்டிய பிரச்னை ஏதோ ஒரு முடிவுக்கு வந்துதானே தீரவேண்டும்.

விக்னேஷின் குடும்பம் அவரை நம்பியே இருந்திருக்கிறது.      தமிழக அரசு இதுபற்றி எந்த அறிக்கையும் தரவில்லை.    அவரது குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்கியே ஆக வேண்டும்.     கர்நாடக அரசு துப்பாக்கி சூட்டில் இறந்தவரின் குடும்பத்துக்கு மூன்று லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்து உள்ளதே?

பொதுவேலை நிறுத்தம் போராட்டம் நடக்கும் போதே அ தி மு க வினர் இன்றே உள்ளாட்சி தேர்தலுக்கு மனு வாங்கும் வேலையை திருவிழா போல்  நடத்த வேண்டுமா?

அடுத்த நாள் தொடங்கினால் என்ன குடி முழுகி  விடும். ?

ஆளும் கட்சியின் இந்த இரட்டை வேடத்தையும் மீறி  பொது வேலை  நிறுத்தம் எல்லாக் கட்சிகளின் ஆதரவோடு வெற்றி  பெற்றது  நல்ல அறிகுறி.

விக்னேஷின் தியாகம் வீண் போகாது!!

This website uses cookies.