சசிகலாவின் உறவுகள் வைத்திருக்கும் சொத்துக்கள் சட்டப் படியானதா வருமான வரி சட்டப்படி அவர்கள் குற்றவாளிகளா இல்லையா அவர்களுக்கு என்ன தண்டணை அல்லது நிவாரணம் என்பதெல்லாம் அரசு நீதிமன்ற விசாரணை களுக்கு பின்னால் தீர்மானிக்க வேண்டிய விஷயங்கள்.
இந்த சொத்துக்களை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் உச்சநீதிமன்றம் ஜெயலலிதா குற்றவாளி என்றும் அவரின் பினாமிகள் இதர குற்றவாளிகள் என்றும் தீர்ப்பு சொல்லி தண்டனை வழங்கி இருக்கிறது.
எல்லா சொத்துக்களையும் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத் தில்தான் இவர்கள் வாங்கி இருக்கிறார்கள்.
16 ஆண்டுகள் முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் முழு ஆதரவுடன்தான் சசிகலா உறவுகள் இத்தனை சொத்துக்களை சேர்த்திருக்க முடியும்.
அவருக்கு தெரியாமலோ ஏமாற்றியோ வாங்கி விட்டார்கள் என்று யாராவது சொன்னால் அவர்கள் தெரிந்தே பொய் சொல்கிறார்கள் அரசியலுக்கு என்று தான் பொருள்.
ஜெயலலிதாவுக்கு வந்த ஊழல் பணத்தை இவர்கள் மூலம் முதலீடு செய்திருந்தால் முதல் குற்றவாளி யார்?
ஜெயலலிதாவா? பினாமி சசிகலா வகையறாவா? இரண்டு பேரும்தானே?
உயிரோடு இருப்பதால் சசிகலாவும் உறவுகளும் சிறையில் இருக்கிறார்கள்.
இறந்து விட்டதால் ஜெயலலிதா புனிதராக மாறி விட்டாரா?
வரிக்கு வரி முதல்வர் பழனிசாமி ‘ அம்மா ஆட்சி அம்மா ஆட்சி ‘ என்று வாய் கூசாமல் எல்லா மேடைகளிலும் முழங்கு கிறாரே அவர் தெரிந்துதான் பேசுகிறாரா ? அதன் பொருள் அம்மாவின் ஊழல் ஆட்சி யை நாங்கள் தொடர்கிறோம் என்பதுதானே?
மக்கள் முட்டாள்கள். எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற அகந்தை தவிர வேறு காரணம் என்ன இருக்க முடியும்?
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை எட்டு மாத காலத்துக்கு மேலாக உச்ச நீதி மன்றம் தீர்ப்பை ஏன் தரவில்லை? தப்புக் கணக்கு போட்டார் நீதிபதி குமாரசாமி என்று எல்லா பத்திரிக்கை களும் எழுதினவே அவருக்கு ஒரு கண்டனம் கூட இல்லையே? மக்கள் எப்படி நீதி மன்றங்களை மதிப்பார்கள்?
சில மாதங்களுக்கு முன்பு உச்ச நீதி மன்றம் தீர்ப்பு தந்திருந்தால் தமிழ் நாட்டின் அரசியல் போக்கே மாறி இருக்குமே?
அவசர அவசரமாக சசிகலா முதல்வர் ஆக வந்து விடுவார் என்ற நிலை உருவான உடன் திடீர் என தீர்ப்பு வருகிறது.
சட்டத்தை அரசே மீறுகிறது. காவல் துறையே மக்களை மிரட்டுகிறது. எங்கே இருக்கிறது ஜனநாயகம்?
போராட முன்வரும் மக்களை அரசு தடுப்புக் காவல் என்ற பெயரால் கைது செய்யும் அடக்கு முறை ஒழிய வேண்டும்.
கண்ணுக்கு தெரிந்தே இத்தனை கொடுமைகளும் நடக்கின்றன.
ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் பெயர் எங்கு போற்றப் படுகிறதோ அங்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு காலில் போட்டு மிதிக்கப் படுகிறது.
ஆட்சியில் இருந்தபோது அவர் செய்த பல நலத் திட்டங்கள் மக்களுக்கு நலம் பயக்கும் வகையில் இருந்தன என்றே வைத்துக் கொள்வோம்?
ஊழல் செய்து சொத்துக்களை பினாமிகள் மூலம் குவித்தார் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு சொல்லி பினாமிகளும் சிறையில் இருக்கும் நிலையில் குற்றவாளியை போற்றும் வகையில் ஒரு அரசு செயல் படுவது மிகப் பெரிய ஜனநாயகப் பிழை.
அவருக்கு மணி மண்டபம் அமைப்பது சட்ட மன்றத்தில் படம் திறப்பது என்றெல்லாம் மரியாதை செய்வது சட்ட பூர்வமாக சரியா என்பதை நீதிமன்றங்கள் தான் தெளிவு படுத்த வேண்டும்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கேள்விக்கு பதில் நிச்சயம் வேண்டும்?