மத்தியில் ஆட்சி மாற்றம் வரலாம் அல்லது நீடிக்கலாம்.
தோற்றாலும் வெற்றி பெற்றாலும் தேசிய கட்சிகள் காணாமல் போய் விடப் போவதில்லை.
மாநிலத்தில் அப்படி அல்ல. ஆட்சி நீடித்தால் அஇஅதிமுக கட்சி நீடிக்கும். தோற்றால் ?????
ஆனால் தேர்தலுக்குப் பிறகு சில கட்சிகள் காணாமல் போகப் போவது உறுதி. அவை எவை ?
மாநிலக் கட்சிகளில் வென்றாலும் தோற்றாலும் கட்சி தொடர்ந்து செயல்படும் என்ற நிலையில் உள்ள கட்சிகள் எவை. ?
விவாதத்திற்கு அப்பாற்பட்டு நிற்கும் கட்சி திமுக.. கொள்கை பலம் அடிமட்ட தொண்டர் பலம் இரண்டும் பின்னிக் கிடக்கும் கட்சிக்கு ஏது வரையறை?
திமுக அணியில் உள்ள கட்சிகளில் தேசிய கட்சிகள் தவிர மாநிலக் கட்சிகள் என்று எடுத்துக் கொண்டால் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் மறுமலர்ச்சி திமுகவும் சித்தாந்த அடிப்படையில் செயல்படும் கட்சிகள். எனவே அவைகளை வெற்றி தோல்விகள் அரசியல் களத்தில் இருந்து அகற்றிவிட முட முடியாது. அவர்களும் பல வெற்றி தோல்விகளை சந்தித்து வந்திருப்பவர்கள்.
இந்திய ஜனநாயக கட்சி இப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்கிறது. அவர்கள் தனி அடையாளத்தை வலியுறுத்தவில்லை. தவிரவும் அது சாதி அடிப்படையில் இயங்கும் கட்சி. ஒன்று தன் அடையாளத்தை இழக்க வேண்டும் அல்லது திமுகவில் கரையவேண்டும். கொங்கு வேளாளர் கட்சி சாதி கட்சி. உதய சூரியன் சின்னத்தில் நிற்பதால் மெல்ல மெல்ல தன் தனித்தன்மையை அது இழக்கும். ஆனால் செயல் படும்.
ஆனால் அதிமுக அணியில் உள்ள கட்சிகளில் தேசிய கட்சியான பாஜகவைத் தவிர மற்றவர்கள் அப்படி அல்ல. புதிய தமிழகம் சாதிக்கட்சி. சாதி இருக்கும்வரை கட்சியும் இருக்கும். புதிய நீதி கட்சி முதலியார் கட்சி. ஏ சி சண்முகம் பணம் உள்ளவர். கட்சியை நடத்துவார் பெயர் அளவுக்கு. ஜி கே வாசன் காங்கிரஸ் போர்வையில் கட்சி நடத்தினாலும் அது காணாமல் போகும் கட்சி பட்டியலில் முதலில் இருக்கிறது.
அதிமுகவும் அமமுகவும் என்ன ஆகும் என்பதே முக்கியம். தொவியை தாங்கிக் கொண்டு கட்சியை நடத்த எடப்படியும் ஒ பி எஸ் சும் தயாராக இருப்பார்களா? செலவு செய்வார்களா? எந்த தத்துவத்தை முன்னெடுப்பார்கள்? எந்த பரப்புரையிலும் அண்ணாவையும் பெரியாரையும் மருந்துக்கு கூட சொல்லாதவர்கள் அவர்கள். பாஜக கோபித்துக் கொள்ளுமே? சில அதிமுக கூட்டங்களில் கலந்து கொள்ளும் பாஜகவினர் பாரத் மாதா கீ ஜெய் என்று கோஷம் எழுப்பி இவர்களையும் கோஷம் போட தூண்டுகிறார்கள் என்று செய்தி வருகிறது.
கடைசியில் பாஜகவில் கரைவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையை பாஜக உருவாக்கி வருகிறது. அதன் மூலம் தமிழ்நாட்டில் வலுவான அடித்தளத்தை அதிமுகவின் செலவில் கட்டி எழுப்புவதுதான் பாஜக வின் திட்டம்.
அதற்கு தெரிந்தோ தெரியாமலோ அதிமுகவினர் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக திமுகவை விட அதிக ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் கட்சிதான். ஆனால் அதற்கு காரணம் ஆன எம்ஜியாரும் ஜெயலலிதாவும் இல்லாத நிலையில் கலைஞர் எதிர்ப்பும் பொருள் அற்ற நிலையில் அதிமுகவை கட்டிக் காப்பது எது. பதவி மட்டும்தான். அது போனால் கட்சியும் போய்விடும் என்பதுதான் இன்றைய உண்மை நிலை.
எனவே வெற்றி தோல்விகளை தாண்டி இது ஒரு திருப்பு முனை தேர்தலாக இருக்கப் போகிறது.
தேமுதிக – விஜயகாந்த் உடல்நிலையை பொறுத்து அதன் உயிர்ப்பு இருக்கும். பேச முடியாமல் இருக்கும் விஜயகாந்தால் எத்தனை காலம் கட்சியை முகத்தை காட்டி மட்டும் கட்டி இழுத்துக் கொண்டு போக முடியும்? வென்றால் கட்சி தொடரும். தோற்றால் காணாமல் போகும்.
நாம் தமிழர் வென்றாலும் தோற்றாலும் தொடரும். அவர்கள் பரப்பி வரும் கருத்துகள் மேலும் மேலும் விவாதங்களை வளர்க்கும்.
தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் நடக்கிறதோ இல்லையோ பல கட்சிகள் காணாமல் போனால் தமிழகம் நலம் பெறும்.
This website uses cookies.