காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்திருக்கும் வேளையில் யார் என்ன சொன்னால் என்ன நான் செய்வதைத்தான் செய்வேன் என்று அண்ணா பல்கலை கழக துணை வேந்தராக கன்னடர் கே பி சூரப்பாவை நியமித்து ஆளுநர் பந்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.
வேற்று மாநிலத்தவர் இப்படி நியமிக்கப் படுவது தமிழ்நாட்டில் மட்டுமே நடக்கிறது.
வேறு எந்த மாநிலத்தில் இப்படி நடக்கிறது?
அம்பேத்கார் சட்டப் பல்கலை கழக துணை வேந்தராக பட்டியலில் இல்லாத சூரிய நாராயண சாஸ்திரியை ஆந்திராவிலிருந்து இறக்குமதி செய்தார் புரோஹித்.
நுண்கலை இசை பல் கலை கழக துணைவேந்தராக பிரமீளாவை கேரளாவில் இருந்து இறக்குமதி செய்தார்.
இப்போது அண்ணா பல்கலைக்கு கன்னடர்.
இவர் மீது குற்றச்சாட்டுகள் இருந்ததால் தான் பணி நீட்டிப்பு செய்யப் படவில்லை என்று புகார்கள் உள்ளன.
நூற்றுக்கும் மேலான தமிழர்கள் மனு செய்திருக்கும் போது வெளி மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்தது ஆகப் பெரிய அவமானம்.
தமிழர்களை ஒரு வழி ஆக்காமல் இருக்க மாட்டார்கள் போல் இருக்கிறது.
அடிமைகள் ஆட்சியில் இருப்பதால் இவர்களை நம்பி பயன் இல்லை என்று முடிவு செய்து ஓராண்டில் குடி அரசு தலைவர் ஆட்சியை அமுல் செய்து அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு பாராளுமன்றத்தொடு சட்ட மன்ற தேர்தலை நடத்தி எப்படியும் காலூன்றி விட முடிவு செய்து விட்டார் மோடி என்றுதான் தோன்றுகிறது.
காவிரி போராட்டத்தை கூட ஒற்றுமையாக நடத்த கட்சிகள் ஒன்று கூட வில்லை.
ஆளும்கட்சி உண்ணாவிரதம் இருந்து அதில் முதல்வரும் துணை முதல்வரும் ஒரு வார்த்தை கூட மத்திய அரசை கண்டித்து பேசாதது வெட்கக் கேடாக முடிந்தது.
சட்டத்தை அமுல்படுத்த இங்கே போராட்டம்.
அமுல் படுத்த மாட்டோம் என்று கர்நாடகாவில் போராட்டம்.
மோடி அரசின் போக்கு தென்னகத்தில் ஒரு காஷ்மீரை உருவாக்காமல் இருக்க மாட்டார்கள் போல்தான் தெரிகிறது.