முன்பு சிங்களன் சுட்டான் இப்போது இந்தியனே சுடுகிறான்.
என்ன கொடுமை இது ?
இந்திய தமிழ் மீனவர்களை சிங்கள கடற்படை சுடுவதும் படகுகளை கைப்பற்றுவதும் தொடர்கதையாக நீடிக்கிறது.
பிடிப்பதும் விடுவதும் என இந்திய சிங்கள அரசுகள் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆளை விட்டு விடுங்கள் படகுகளை வைத்துக் கொள்ளுங்க என்று சுப்பிரமணிய சாமி சொன்னார். அதை இந்திய அரசு ஆமோதிப்பது போல் தான் அதன் செயல் பாடுகள் இருக்கின்றன.
முன்பே இந்திய கடற்படை அதிகாரி ஒருவர் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தால் பாது காக்க முடியாது என்று பேட்டியே கொடுத்திருந்தார்.
தமிழ் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை காப்போம் என்று ஒப்பந்தம் போட்டவர்கள் கச்சத்தீவை தானம் கொடுத்தவர்கள் இப்போது கையை விரிக்கிறார்கள்.
ஏமாந்தவன் ஆகிப் போனான் தமிழன்.
இன்று இந்திய கடலோர காவல் படை கப்பலில் வந்த வீரர்கள் இந்திய கடல் பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள்.
ஜெபமாலை என்பவரின் படகில் இருந்த பிச்சை ஆரோக்கியதாஸ் ஜான்சன் சான்றோ, நிசாந், ஆகியோரை தாக்கி விட்டு சென்றிருக்கிறார்கள்.
அடிக்கும்போது தமிழில் பதில் சொன்னதால் இந்தியில் பேசுடா என்று அடித்திருக்கிறார்கள்.
தமிழக காவல் துறை அவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக தெரிகிறது.
டெல்லி செய்வதை கண்டிக்க முடியாத அரசு ஆண்டு வரும் நிலையில் வழக்கு என்ன செய்யும்?
இது குறித்து உயர் நீதி மன்றமும் வரும் வெள்ளிகிழமை விசாரிக்க இருக்கிறது.
பாதுகாப்பு அளிக்க வேண்டிய இந்திய கடலோர காவல் படை இந்திய மீனவர்களையே சுடுகிறது என்றால் அது மேல் அதிகாரிகளின் கவனத்துக்கு அப்பால் நடந்திருக்கும் என்று நினைக்க முடியாது.
இரட்டை மடி வலையை தடை செய்யப் பட்டதை பயன் படுத்தினார்கள் என்றால் அதற்கு தண்டனை துப்பாக்கி சூடா?
இதே காரணத்தை சொல்லித்தான் சிங்கள கடற்படையும் சுட்டது.
தமிழன் மீன்பிடிதொழிலை விட்டு ஒழிய வேண்டும் என்று இந்திய மத்திய அரசு திட்டம் இடுகிறதா?
எந்தக் கோணத்தில் பார்த்தாலும் மன்னிக்க முடியாத குற்றத்தை இந்திய கடலோர காவல் படை செய்திருக்கிறது.
சுடவில்லை என்று மத்திய பத்திரிகை தகவல் நிறுவனம் செய்தி வெளியிடுகிறது. விசாரணைக்காக நிறுத்தப் படாததால் விடப் பட்ட எச்சரிக்கையை திசை திருப்ப அப்படி ஒரு குற்றச்சாட்டை மீனவர்கள் சொல்லக் கூடும் என்று விளக்கம் வேறு சொல்கிறார்கள் .
நம் நாட்டு கப்பல் படை மீது நமது மீனவர்களே பொய் குற்றச்சாட்டு சொல்ல வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.
சிங்கள சூழ்ச்சிக்கு இந்திய கடற்படை இரையாகி விட்டது என்ற அச்சம் உண்மையாகி விடக்கூடாது.