சாதிக் கட்சிகளுக்கு தடை விதித்தால் எதுவெல்லாம் மிஞ்சும் ?!

tamilnadu-parties

இந்து சாதிகள்தான் சமுதாய மோதல் களுக்கெல்லாம் காரணமாக இருக்கின்றன.
சங்கம் வைத்து எங்கள் பொருளாதார உயர்வை வலுப்படுத்துகிறோம் என்றால் தப்பே இல்லை ஆனால் கட்சி நடத்தி சமுதாய பிளவை அதிகப் படுத்துவேன் என்றால் அது சரியா? சங்கம் நடத்த உரிமை உண்டு ! கட்சி நடத்த உரிமை உண்டா?
அப்படி தடை விதித்தால் இப்போது இருக்கும் கட்சிகளில் யார் யாரெல்லாம் மிஞ்சுவார்கள்?

தி மு க – அ தி மு க – காங்கிரஸ் – இந்திய கம்யுனிஸ்டுகள் – மார்க்சிஸ்டுகள் – நாம் தமிழர் கட்சி-பாரதிய ஜனதா கட்சி ,

ம தி மு க – தே மு தி க – ( இரண்டிலும் பெருமளவில் தெலுங்கு பேசும் மக்கள்
இருந்தாலும் , வைகோவின் திராவிட இயக்க பூர்விகம், விஜயகாந்தின் சினிமா ரசிகர்கள் எல்லா சாதிகளிலும் இருப்பது நிஜமே என்பதால் சாதிக் கட்சி முத்திரையில்
இவர்கள் தப்புகிறார்கள்) – –
இவர்கள் மீது சாதி சாயம் பூச முடியாது

பா ம க – மருத்துவர் ராமதாஸ் முடிந்த வரை அந்த கட்சியை
எல்லாருக்குமான கட்சியாக உருவகப்படுத்த பாடுபடுகிறார்
தாழ்த்தப் பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களை கட்சியின் உயர் பொறுப்பில்
அமர வைக்கிறார் – எல்லா சமுதாயத்தை சேர்ந்தவர்களையும் கட்சி
பொறுப்பில் சேர்க்கிறார். எல்லா சமுதாய மக்களின் பிரச்னைகளுக்கும்
குரல் கொடுக்கிறார். . மருத்துவர் அன்புமணியும் தந்தை வழியில்
அயராது பாடுபடுகிறார். இன்றைக்கு எல்லா அரசியல் தலைவர்களும்
மருத்துவர் அறிக்கை வந்தபின் தான் எந்த பிரச்னை தொடர்பாகவும் நிலை
எடுக்கிறார்கள். எல்லாம் சரி. பா ம க என்றால் அது வன்னியர் கட்சி
என்ற முத்திரையை அதனால் அழிக்க முடிகிறதா?

பிற சமுதாய மக்களை தன் புகழ் பாட வைக்கும் முயற்சியாகத்தான்
கட்சியில் இருக்கும் மற்றவர்களை பார்க்கிறார்களே தவிர
கட்சி எல்லாருக்குமான கட்சியா?
நீங்கள் சித்திரை திருவிழாவில் வன்னிய சொந்தங்களை மட்டும் தானே
அழைக்கிறீர்கள் . பிற சமுதாயத்தவர் எப்படி உங்களை தங்கள்
தலைவராக ஏற்பார்கள்? கட்சியில் ஜனநாயகம் இருக்கிறதா?
இருந்தால் கட்சியே இருக்காது . உடைத்து விடுவார்கள்.

விடுதலை சிறுத்தைகள்;
தொல். திருமாவளவன் சிறந்த சிந்தனையாளர்.
ஒடுக்கப் பட்ட சமுதாயங்களின் உரிமைக்குப் போராடும் போராளி
விடுதலை என்பது தாழ்த்தப் பட்டவர்களுக்கு மட்டும் அல்ல
எல்லா ஒடுக்கப் பட்டவர்களுக்கும்தான் என்பதே அவரது குரல்
கொண்ட லட்சியத்திற்காக வாழ்க்கையே அர்ப்பணித்து வாழ்பவர்
தனிப்பட்ட முறையில் எந்த குறையும் காண முடியாத பண்பாளர்
ஆனால் கட்சி; தாழ்த்தப் பட்டவர்களிலேயே பறையர் மற்றும் கிறிஸ்தவர்
சமுதாய மக்களின் கட்சியாகதானே பார்க்கிறார்கள்.

தமிழ் மாநில காங்கிரஸ்
பெயரில்தான் காங்கிரஸ் . உடையார் மூப்பனார் நைனார்
மக்களின் கட்சிதான் அது. அதில்லாமல் முன்பு காங்கிரஸ்
கட்சியில் இருந்தபோது இருந்த செல்வாக்கு மிக்க பிற சாதியினர்
வாசனின் பண பலத்தை நம்பி கூட இருக்கிறார்கள்

புதிய தமிழகம்
டாக்டர் கிருஷ்ணசாமி எல்லா பிரச்னைகளையும் பற்றி பேசும் வல்லமை
படைத்தவர் . சிந்தனையாளர். தன்னை மற்றவர்கள் அங்கீகரிக்க மாட்டார்கள்
என்ற சிந்தனையில் தேவேந்திர குல வேளாளர் மக்கள் மட்டும் ஆதரித்தால் போதும்
என்று தீர்மானித்து கட்சி நடத்துபவர். தான் எல்லாருக்குமான தலைவர்
என்று அவரே சொல்ல மாட்டார். பள்ளர் என்று அழைப்பதை தவிர்த்து
தேவேந்திரர் என்று மரியாதையாக அழைக்க வைக்கப் படுவதை சாதனையாக நினைப்பவர்..
அதற்கான சட்ட போராட்டத்தை கையில் எடுப்பவர். இந்த சமுதாய மக்கள்
கடந்த காலத்தில் எதிர்கொண்ட அடக்கு முறைகளை கணக்கில் எடுத்துக் கொண்டால்
அவரது முயற்சியில் தவறே இல்லை.
ஆனாலும் சாதிக் கட்சி முத்திரையில் இருந்து தப்ப முடியாதே ?

பிற கட்சிகளை தலைவர்களை கொண்டுதான் அடையாளம் காண வேண்டும்.
பச்சமுத்து என்கிற பாரிவேந்தர் ; இந்திய ஜனநாயக கட்சி என்றாலும் அது
உடையார் கட்சிதான்.
ஏ சி சண்முகம் ; புதிய நீதி கட்சி என்றாலும் அது முதலியார்
கடசிதான்
டாக்டர் சேதுராமன் ஸ்ரீதர் வாண்டையார் நடிகர் கார்த்திக் எல்லாரும்
முக்குலத்தோரை தளமாக கொண்டு இயங்குபவர்கள் . விஸ்வகர்மா ,
குலாலர் குல மக்கள் ஒரு அரசியல் அமைப்பை வைத்திருக்கிறார்கள்

ஜான் பாண்டியன் தேவேந்திர குல வேளாளர் கட்சி தான்
விடுபட்டுப் போன பலரும் சாதிக் கட்சி நடத்துபவர்கள் எவருக்கும்
அந்த உரிமை உண்டா? அதை பறித்தால் என்ன?
ஆம் . எவருக்கும் சாதி அடிப்படையில் கட்சி நடத்த உரிமை கூடாது.

எல்லா சமுதாய மக்களையும் நிர்வாகிகளாக வைத்திருந்தால்தான்
தேர்தல் கமிஷன் அங்கீகாரம் அளிக்க வேண்டும்.
சாதிக் கட்சிகள் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும்.
சங்கம் வைக்கலாம் . கட்சி கூடாது என்பது சட்டமாக வேண்டும்.
தமிழ் மக்கள் சிந்திப்பார்களாக !

முஸ்லிம் கள் தனியாக மத ரீதியில் கட்சி நடத்துபவர்கள்
அப்படியே கிறிஸ்தவர்களும்
அவர்களுக்கே வேண்டுமானால் விதிவிலக்கு தரலாம்.
குறைந்த பட்சம் சாதியை சாதி சார்ந்த அரசியலை ஒழிப்போமே!!!!.

( கருணாஸ் என்ற நடிகர்  முக்குலத்தோர் புலிப்படை வைத்துக் கொண்டு

ஒரு சட்ட மன்ற உறுப்பினருக்கு உரிய எந்த அடையாளமும் இல்லாமல்

ஒரு நான்காந்தர மேடை பேச்சாளரைப் போல் பேசி தன் மீது வழக்குகளை

வரவழைத்து கொண்டு கைதாகும் நிலையில் இருப்பதை பார்த்தபின்

எழுந்த சிந்தனை இது)