எடப்பாடி ஆட்சி தொடர, முடிந்த மட்டும் தேர்தல் கமிஷன் முயன்றது.
மார்ச் 10 தேதி தேர்தல் அறிவிப்பு கொடுத்தபோதே அப்போது காலியாக இருந்த 21 தொகுதிகளுக்கு பதிலாக 18 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தலை அறிவித்தது தேர்தல் கமிஷன்.
வழக்கு நிலுவையில் இருக்கிறது என்ற சொத்தை வாதத்தை வைத்து மற்ற மூன்று தொகுதிகளுக்கும் தேர்தலை அறிவிக்கவில்லை.
முன் உதாரணங்களாக பல தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே தேர்தலை நடத்தியதை கண்டுகொள்ளவில்லை.
திமுக தேர்தல் கமிஷனில் மனு கொடுத்து பயனில்லாமல் போகவே உச்ச நீதிமன்றத்தை அணுகியதும் நடத்துகிறோம் என்று பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது தேர்தல் கமிஷன்.
மார்ச் 21ம் தேதி சூலூர் கனகராஜ் இறந்ததும் வேறு வழியில்லாமல் இப்போது நான்கு தொகுதிகளுக்கும் தேர்தலை அறிவித்துள்ளது .
இப்போதும் கூட மே 19 ம் தேதி என்பதால் அந்த நான்கு தொகுதிகளிலும் அமைச்சர் படை அங்கே வேலை செய்யும் வாய்ப்பை அதிமுகவுக்கு தேர்தல் கமிஷன் அளித்துள்ளது.
திமுக அணிக்கு இப்போது 97 உறுப்பினர் ஆதரவு இருக்கிறது. இந்த 22 லும் வென்றுவிட்டால் ஆதரவு எண்ணிக்கை 119 ஆகி ஆட்சி மாற்றம் தவிர்க்க முடியாதது ஆகிவிடும்.
தினகரன் வேறு தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாறும் என்று ஆரூடம் கூறி வருகிறார். அது என்ன கணக்கில் என்று அவருக்குத்தான் தெரியும்.
இரண்டு அணிகளும் ஒன்று சேரப் போகிறார்களா?
கருத்துக் கணிப்பில் எல்லா தொகுதிகளிலும் தினகரன் மூன்றாவது இடத்தை பெறுவார் என்று சொல்கிறார்கள். அவரால் பாதிக்கப்படக் கூடியவர்கள் என்றால் அதிமுக வினர்தான். ஆர்கே நகர் ஒரு விதிவிலக்கு. அது ஒருபோதும் விதியாக முடியாது.
அதிக பட்சம் விஜயகாந்த்தை போல் தனித்து போட்டியிட்டு 8.33 % -10.1% வாக்குகளை வாங்கி தன்னை அசைக்க முடியாத சக்தியாக ஒருவேளை உருவாக்கிக் கொள்ளலாம். அதற்கு மேல் வாங்கினால் ஒருவேளை அதிமுக அணிகள் இணைப்பிற்கு அது வழி கோலலாம்.
பெரும்பான்மை பெற தேவையான தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற வில்லை என்றால் என்ன செய்யப் போகிறார்கள்.? தினகரனுடன் ஒட்டிக கொள்வார்களா? சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்றுக் கொள்ளப் போகிறார்களா?
பாஜகவுடன் இரண்டற கலந்துவிட்ட இபிஎஸ் – ஒபிஎஸ் எங்கே? தன் வாழ்நாளில் பாஜக-வுடன் இனி ஒட்டுறவு இல்லை என அறிவித்து விட்ட தினகரன் எங்கே?
ஒருவேளை இடைதேர்தல் வெற்றிகள் பலருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டால் கூட மாற்றம் வரும் வாய்ப்பு குறையப் போவதில்லை.
மக்கள் தீர்ப்பு இபிஎஸ் – ஒபிஎஸ் அணிக்கு முழுவதும் சாதகமாக இல்லாமல் தினகரன் அறுபது லட்சம் ஓட்டுகளுக்கு மேல் பெற்று விட்டாலே அந்த அணியில் பிளவு தவிர்க்க முடியாதது ஆகிவிடும். அதைத்தான் தினகரன் எதிர்பார்க்கிறார். அப்போதும் காட்சி மாற்றம் ஏற்படும். அது என்ன என்பது தேர்தல் முடிவுகளுக்கு பிறகுதான் தெரிய வரும்.
எல்லாற்றுக்கும் மேலாக மத்தியில் மோடி இல்லை என்றாலே இங்கே இபிஎஸ் -ஒபிஎஸ் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ள தயங்க மாட்டார்கள்.
அதற்கும் எண்ணிக்கை வேண்டுமே? மத்தியில் ஆதரவு இருந்து இங்கே பெரும்பான்மை இல்லை என்றாலும் மத்தியில் ஆதரவு இருந்து இங்கே இழுபறி என்றாலும் ஆட்சி தொடர்வது முடியாதது ஆகிவிடும்.
குறைந்த பட்சம் பத்து தொகுதிகளில் அதிமுக வென்றால் மட்டுமே ஆட்சி நீடிக்க முடியும்.
அதற்கு வாய்ப்பே இல்லை.