காவிரிப் பிரச்னையில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் திருமாவின் விடுதலை சிறுத்தைகள் கலந்து கொள்ளாமல் போனாலும் திருமா வெளியிட்ட அறிக்கை அவர் வைகோவின் பிடியிலிருந்து நழுவிக் கொண்டிருக்கிறார் என்பதை நன்றாகவே காட்டியது.
திமுக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியத்தை வரவேற்ற திருமா அந்த முயற்சிக்கு பாராட்டையும் தெரிவித்தார். தான் கலந்து கொள்ள விரும்பியதாகவும் தெரிவித்தார்.
இடைத்தேர்தல் வரும் சூழலில் தான் ம ந கூ வை தான் உடைத்து விட்டதாக பழி வந்து சேருமே என்பதற்காகத்தான் கலந்து கொள்ள வில்லை என்று திருமா சொன்னது அவரது உள்ளம் தி மு க வை நோக்கி திரும்பத் தொடங்கி விட்டதை காட்டியது.
‘ தங்களின் உள்ள நிலை -உண்மை நிலையை புரிந்து கொண்டேன் – வரவேற்றதற்கு நன்றி’ என்று ஸ்டாலினும் தன் பங்குக்கு பதில் அனுப்பி அரவணைக்க தயார் என்பதை உணர்த்தி விட்டார்.
விவசாயிகள் நடத்திய ரயில் மறியல் போராட்டத்தில் திமுகவோடு கம்யுனிஸ்டுகள் கலந்து கொண்டார்கள்.
இப்போது திருமாவும் கழன்று வருகிறார். விடுதலை சிறுத்தைகள் மக்கள் நல கூட்டணியில் நீடித்து தற்கொலை செய்து கொள்வதை எந்த தொண்டனும் அனுமதிக்க மாட்டான் என்பது தெரிந்து விட்டது.
இஸ்லாமியர்களின் ஒட்டு பெரிதாக எந்த தொகுதியிலும் சிறுத்தைகளுக்கு கிடைக்க வில்லை.
அவர்கள் அதிமுக திமுக என்றே பிரிந்து நிற்கிறார்கள். தனித்து வெல்லும் வாய்ப்பு இல்லை என்பது தெரிந்த பின் அவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு அதுதான்.
மற்ற தோற்கும் கட்சிகளுக்கு கொள்கை என்று சொல்லிக்கொண்டு வாய்ப்புகளை இழக்க அவர்கள் தயாராக இல்லை.
இதற்கிடையே அவர் பா ஜ க பக்கம் சாய்கிறார் என்று ஒரு செய்தி சொல்கிறது.
எப்படியோ வைகோவின் பிடியிலிருந்து விடுபட்டால் சரி !!!