தமிழக அரசியல்

மீண்டும் வஞ்சிக்கப் பட்ட தமிழக விவசாயிகள்; உச்சநீதிமன்ற தீர்ப்பு பிரச்னையை தீர்க்குமா??!!

Share

ஒரு வழியாக உச்சநீதி மன்றம் காவிரிப் பிரச்னையில் இறுதி தீர்ப்பை வெளியிட்டு  விட்டது.

கர்நாடகத்தில் தேர்தல் வரும் நேரத்தில் தீர்ப்பை தர முன் வந்தது நல்லதே.     ஒரு நீதிபதி ஒய்வு பெற இருக்கும் நிலையில் உடனடியாக தீர்ப்பு வந்தது என்றும் சொல்கிறார்கள்.

தமிழ் நாட்டுக்கு கிடைத்து வந்த காவிரி நீர்  கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக இடைக்கால தீர்ப்பில்  கர்நாடகம் தர வேண்டிய நீர்  205  டி எம் சி யி  லிருந்து   இறுதி தீர்ப்பில்    192

டி எம் சி ஆக குறைந்து தற்போது 177.25    டி எம் சியில் வந்து நின்று      14.75  டிஎம்சி  நீரை குறைத்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது உச்சநீதி மன்றம்.   கேரளாவுக்கும் புதுச்சேரிக்கும் தலா   30   ,   7   டி எம் சி யில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

தமிழ்நாட்டில் இருக்கும் இருபது டி எம் சி நிலத்தடி நீரையும் பெங்களூருக்கு தேவையான குடிநீர்  தேவையையும் தீர்ப்பாயம் கருத்தில் கொள்ள வில்லை என்று காரணம் கூறி அதை இப்போது நிவர்த்தி செய்வதாக உச்சநீதி  மன்றம் கூறுகிறது.

கவனத்தில் எடுத்துக் கொள்ளாதது இதுவரை உச்சநீதி மன்றத்தின்  உத்தரவுகளை நிறைவேற்ற கர்நாடகம் தொடர்ந்து மறுத்து வந்ததை.

ஆறு வாரத்திற்குள் மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு  உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டிருக்கிறது.     அது உங்கள் வேலையல்ல மத்திய அரசின் வேலை என்று முன்பே மத்திய அரசு நிலை எடுத்து இருந்தது.

வரவேற்று கொண்டாடி  இருக்கிறார்கள் கர்நாடகத்தில்.     இங்கே அதிருப்தி இருந்தாலும் அதை தெருவுக்கு கொண்டு வர தமிழர்கள் தயாராக இல்லை.

இந்தியாவில் இணைந்திருப்பதன் காரணமாக இன்னும் எத்தனை உரிமைகளை தமிழ்நாடு  இழக்க வேண்டும் என்று தெரியவில்லை.

மாதாமாதம் விடுவிக்க வேண்டிய நீரை தடை இன்றி விடுவிக்க என்ன வழிமுறை?

மீண்டும் மீண்டும் எங்களுக்கு போகத்தான் மீதி நீரை எங்கள் விருப்பப் படி விடுவிப்போம் என்ற கர்நாடகத்தின் அடாவடி நிலைப்பாடு முடிவுக்கு கொண்டு வரப்படுமா?

நடப்பு பசலியில் கூட கர்நாடகம் தர வேண்டிய நீரில் ஐம்பது டி எம் சி நீருக்கு மேலாக நிலுவையில் இருக்கிறது.

சம்பா பயிர்கள் டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கொண்டு இருக்கின்றன.     ஏறத்தாழ ஏழு லட்சம் ஏக்கர் நிலங்கள் பாதிக்கப் படும் .    தீர்ப்பை வரவேற்கும் கர்நாடகா இப்போதாவது நீரை விடுவிக்குமா?

இதை வைத்து தேர்தலில் வெற்றி  பெற  பா ஜ க முயற்சிப்பது எதை குறிக்கிறது?

தீர்ப்புக்கு மத்திய அரசு காரணம் என்று அல்லவா அர்த்தம் ஆகிறது.

பொறுப்பை மத்திய அரசிடம் தட்டிக் கழிக்காமல் தானே தீர்ப்பை நடைமுறைப் படுத்தும் அமைப்பை உருவாக்கி ஆணை இட்டிருந்தால் அர்த்தம் இருந்திருக்கும்.

இதுவரை மாதாமாதம் தமிழகத்துக்கு தர வேண்டிய நீரை கர்நாடகா  விடுவிக்காததுதான் பிரச்னை என்பதை மறந்து விடக் கூடாது.

நீரைத் திறந்து விட உச்சநீதி மன்றம் உத்தரவிட்ட போது நாற்பது தமிழக பேருந்துகள் எரிக்கப் பட்டன.   லட்சக் கணக்கான தமிழர்கள் விரட்டி யடிக்கப் பட்டார்கள். என்ன நிவாரணம் தந்தார்கள்?     எத்தனை பேர் தண்டிக்கப் பட்டார்கள்?

நதிநீர் யாருக்கும் சொந்தமல்ல என்று தீர்ப்பு வழங்கி விட்டால் உரிமை கோராமல் இருக்கப் போகிறார்களா?

கர்நாடக அரசின் கட்டுப் பாட்டில்  இல்லாமல் , சுயேச்சையாக இயங்கும் அதிகாரம் பெற்ற , தீர்ப்பை அமுல் படுத்தும் அமைப்பை,  உருவாக்கி இயங்க வைக்க  மத்திய அரசால் முடியுமா?

முடிந்தால் மட்டுமே இந்த தீர்ப்புக்கும்  மரியாதை இருக்கும்.

இல்லையேல் குப்பைக் கூடைக்குள் கிடக்கும் கிழிந்த தாளுக்கு இருக்கும் மரியாதை கூட  உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு இருக்காது.

This website uses cookies.