தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை குழி தோண்டி புதைக்கும் காங்கிரஸ் தலைவர்கள்??!!

congress
congress

தேசிய அளவில் மதவாத பாஜக வுக்கு பதில் சொல்லக் கூடிய மதசார்பற்ற சோஷலிச முற்போக்கு கொள்கைகளை கொண்ட கட்சியாக காங்கிரஸ் இருந்து வருகிறது.

ஆனால் தமிழ்நாட்டில் அதை வளர விட மாட்டோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அதன் தலைவர்களாக இருப்பவர்களே செயல்படுவதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை.

எழுவர் விடுதலை பிரச்னையை எடுத்துக் கொள்வோம்.

ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு பின்னர் பதினெட்டு பேர் விடுதலை செய்யப்பட்டு மீதமுள்ளவர்களின் மரண தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு அவர்களும் இருபத்தி ஒன்பது ஆண்டுகளை சிறையில் கழித்து விட்டு இப்போது எல்லா ஆயுள் தண்டனை கைதிகளையும் போலவே எங்களையும் விடுதலை செய்யுங்கள் என்ற கோரிக்கையும் விசாரிக்கப்பட்டு உச்ச நீதிமன்றம் மாநில அரசு இது பற்றி முடிவு செய்யட்டும் என்று அனுமதி வழங்கிய பிறகு அமைச்சரவையும் தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பி அவர் அமைச்சரவை தீர்மானத்தைத் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் இந்த நிலையில் தமிழக அமைச்சரவையில் முடிவை அமுல் படுத்துங்கள் என்று ஆளுனரை கேட்பதில் யாருக்கு என்ன தயக்கம் கருத்து மாறுபாடு இருக்க முடியும்?

காங்கிரசுக்கு இருக்கிறது.  அது எப்படி இந்த மண்ணில் வளர முடியும்?                மாநில தலைவர் கே எஸ் அழகிரி நாங்கள் எழுவர் விடுதலையை எதிர்ப்போம் என்கிறார். பின்னர் சட்டம் தன் கடமையை செய்யட்டும் என்கிறார். சட்டம் மாநில அமைச்சரவை தீர்மானம் போட்டு நிறைவேறி ஆளுநருக்கு அனுப்பி விட்டது, கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா?

ஆளுநர் அமைச்சரவையில் முடிவுக்கு கட்டுப் பட்டவரா இல்லையா? அவர் மத்திய அரசின் கண்காணியாகவே இருக்கட்டும். அதற்காக மாநில அமைச்சரவையை அதன் முடிவை அமுல்படுத்த மாட்டாரா?

புதுவை துணை நிலை ஆளுனருக்கே அமைச்சரவையின் முடிவில் தலையிட அதிகாரம் இல்லை என உச்சநீதி மன்றம் தீர்ப்பு சொல்லி  இருக்கிறது.

ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டார்கள் என்பது உண்மையா இல்லையா? அப்படியானால் இன்னமும் ராகுலும் பிரியங்காவும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்களா? 

அவர்களே மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம் என்றால் நீங்கள் யார்? தமிழர்கள் ஆக கூட இருக்க வேண்டாம். மனிதர்கள் இல்லையா?

சீக்கிய முதல்வர் பியாந்த் சிங்கை சுட்டுக் கொன்ற கொலையாளிகளுக்கு மன்னிப்பு  அளித்தது  உங்கள் காங்கிரஸ்.

இந்திரா காந்தியை கொன்ற கொலையாளிகள் சீக்கியர் என்பதால் மன்மோகன் சிங்கை ஒதுக்கி விட்டீர்களா? எப்படி ஏற்றுக் கொண்டீர்கள்? நல்ல வேலையாள் கிடைத்தார் என்பதாலா?

எழுவர் விடுதலை ஆதரிப்பதன் மூலம் காங்கிரசின் மதிப்பு கூடுமே தவிர குறையாது.   

பெருந்தன்மை வேண்டாம். மனிதாபிமானம் கூடவா இல்லை.

வெளங்கிடும் காங்கிரஸ்?