டிசம்பர் 6ம் தேதி முதல் வேட்பு மனு தொடங்கி 27, 30 ஆகிய இரண்டு தேதிகளில் தேர்தல் நடக்கும் என தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இதை உச்சநீதிமன்றத்தில் வரும் 13 ம் தேதி தாக்கல் செய்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து தப்பிக்க வழி தேடி இருக்கிறது தேர்தல் ஆணையம்.
ஊரக பகுதிகளுக்கு மட்டும்தான் இந்த தேர்தல்.
நகர்ப்புற ஊராட்சிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. நிர்வாக காரணம் என்று காரணம் சொல்லப்படுகின்றது. எப்போது வரும் என்ற அறிகுறியும் இல்லை. விரைவில் அறிவிப்போம் என்ற தேர்தல் கமிஷனரின் அறிவிப்பு மட்டுமே வந்திருக்கிறது.
இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்கள் இதுவரை நடத்தப்பட்டதே இல்லை. முதல் முறையாக இரண்டு கட்ட தேர்தல்.
திமுக உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்திருந்த உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகளை உச்சநீதி மன்றம் வரும் 5ம் தேதி அவசர வழக்காக விசாரிக்க இருக்கிறது.
அப்போதுதான் இட ஒதுக்கீடு, மறுவரையறை, போன்றவற்றில் சுட்டிக்காட்டப் பட்ட குறைகள் களையப்பட்டு தேர்தல் நடத்தப்படுமா அல்லது அவைகளை புறந்தள்ளி தேர்தல் நடத்தப்படுமா அல்லது தேர்தலே தள்ளி வைக்கப் படுமா என்பது தெரிய வரும்.
முன்பும் இதுபோல்தான் 2016ல் உள்ளாட்சி தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்ட பிறகு தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்பதை நினைவு கூர்ந்தால் மீண்டும் அதே நாடகத்தை அரங்கேற்றுகிறதா தேர்தல் ஆணையம் என்ற கேள்வி எழுகிறதா இல்லையா?
எம்ஜியார் காலத்திலும் இதேபோல் தான் நகர்ப் புறங்களுக்கு தேர்தல் நடத்தாமல் அதை திமுக ஆட்சிக்கு வந்த பின் தான் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.
31 மாவட்டங்களுத்தான் தேர்தல். இப்போது செங்கல்பட்டையும் சேர்த்து 37 மாவட்டங்கள். புதிதாக உருவாக்கப் பட்ட மாவட்டங்கள் பின்னால் வரையறை செய்யப் பட்டு மாவட்ட பஞ்சாயத்துக்கள் உருவாகப்படும் என்பது எந்தளவு நியாயாம் என்பதையும் நீதிமன்றம் பரிசீலிக்கும்.
எது எப்படியோ எல்லார் பார்வையும். உச்ச நீதிமன்றத்தின் பக்கம் குவிந்திருக்கிறது.
தேர்தல் கமிஷன் ஏற்படுத்தியுள்ள இந்த தலைவலியை உச்ச நீதி மன்றம் போக்கி விடும் என்று எதிர்பார்ப்போம்.
திமுக தேர்தலை நடத்த தடை கேட்கவில்லை. குறைகளை களைந்து நடத்துங்கள் என்றுதான் கேட்கிறார்கள்.
இடையில் பொங்கல் பரிசாக எடப்பாடி அறிவித்த ரூபாய் ஆயிரம் அன்பளிப்பு தேர்தலை மனதில் வைத்துத்தான் என்பதை மக்கள் அறியமாட்டார்களா?
ஜனவரி 2018ல் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி தேர்தல் என்று அறிவித்து விட்டு ஓராண்டில் ஏன் மறைமுக தேர்தலுக்கு அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்ற கேள்விக்கு எடப்பாடி அரசின் பதில் ஏற்றுக் கொள்கிற மாதிரி இல்லையே.
பொய்மையும் வஞ்சகமும் கொண்ட தமிழர்களின் ஆட்சியாக அதிமுக அரசு செயல்படும் போது தமிழர்களுக்கு ஆளுகின்ற தகுதியே இல்லை என்று மாற்றார் வசை பாடுவார்களே என்ற எண்ணம்தான் நம்மை வருத்துகிறது.
தனது கூட்டணி கட்சிகளையே தன் முடிவுகளுக்கு ஆதரவு தெரிவிக்க வைக்க அதிமுகவால் முடியவில்லையே?
இறுதிப் புகலிடம் உச்சநீதி மன்றம்.
ஐந்தாம் தேதி அது என்ன செய்கிறதென்று பார்க்க காத்திருப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.