பெருந்தலைவர் காமராஜ் 116 வது பிறந்த நாள் இன்று! தமிழர் தலைவர்கள் சாதித் தலைவர்கள் ஆக்கப் படுகிறார்களே?

சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஒன்பது ஆண்டுகள் சிறையில் கழித்து நகர் மன்றத் தலைவர் , முதல் அமைச்சர் , பாராளுமன்ற உறுப்பினர், அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் என்று  பல பரிணாமங்களை எட்டி இன்று கல்வித் திருவிழாவாக அவர் பிறந்த நாள் கொண்டாடப் படும் அளவு மக்கள் மனங்களில் நிறைந்திருப்பவர் காமராசர்.

பொதுவாழ்வில் உழைப்பதற்கும் உயர்வதற்கும்  படிப்பு தேவை இல்லை நேர்மை மட்டுமே போதும் என்ற இலக்கணத்தை வகுத்தவர் காமராசர்.

அவர் வாழ்ந்த காலம் அப்படி.

பெரும்பான்மையானவர்கள் ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால்  என்ன என்ற மனப்போக்கில் வாழ்ந்தவர்கள் தானே.

சாதியம் என்ன சாதித்திருக்கிறது?

காமராசரை நாடாராகவும்,  முத்துராமலிங்கத் தேவரை முக்குலத்தோராகவும், வ.வு.சி. யை வெள்ளாளர் ஆகவும் , அம்பேத்கரை மகராகவும் , ரெட்டைமலை சீனிவாசனை தாழ்த்தப் பட்டோர் ஆகவும் ம பொ சி யை கிராமணி ஆகவும்  அடையாளம் காட்டியிருக்கிறது .

அவர்கள் அந்த சாதிய எண்ணத்தோடு சமுதாயத்துக்கு உழைத்தார்களா ?

இன்று காமராசர் பிறந்த நாள் விழாவுக்கான ஏற்பாடுகளை நாடார் மகாஜன சங்கம் செய்வது வரவேற்கத் தக்க ஒன்றா?

எல்லா சாதிகளும் அல்லது சாதிகளை விட்டொழித்து எல்லா தமிழர்களும் எல்லா தமிழ்த் தலைவர்களின் பிறந்த நாள் விழாக்களை கொண்டாட வேண்டும்.

இன்றும் எல்லா தமிழ்த் தலைவர்களும் அவரவர் சாதி அடையாளத்தோடு அளவிடப் படுகிறார்களா இல்லையா?

முதல்வர் பழனிசாமி  கவுண்டர், மருத்துவர் ராமதாஸ் வன்னியர்,  ஜி கே வாசன் மூப்பனார் , திருமாவளவன் பறையர், கிருஷ்ணசாமி  ஜான் பாண்டியன் எல்லாம் பள்ளர் , நெடுமாறன் வெள்ளாளர், ஓ பி எஸ் மறவர் திருநாவுக்கரசு மறவர் வைகோ விஜயகாந்த் தெலுங்கர் சீமான் நாடார் என்று அநேகமாக எல்லா தலைவர்களுமே ஏதோ  ஒரு  சாதியை வைத்தே அடையாளம் காணப் படுகின்றனர்.    ஆனால் எல்லாருமே தங்களை அப்படி சொல்லிக் கொள்வதில்லை.   சாதி ஒழிப்புக்காக பாடு படுபவர்கள் கூட சாதியை வைத்து அடையாளம் காணப படுவதுகொடுமை.

கலைஞரும் ஸ்டாலினும் இசை வேளாளர்கள் என்று கொண்டாடுவதில்லை.   அவர்கள் எல்லா சாதிகளிலும் மணவினை கொண்டு சாதிக்கு அப்பாற்பட்டவர்களாக மாறிவிட்டார்கள்.

சாதி ஒழிப்பு எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.  சாதி ஒழிந்தால் சங்கங்களுக்கு என்ன வேலை?

அதுவரை,

முதலில் பெருந்தலைவர் காமராசர் உள்ளிட்ட தமிழ்த் தலைவர்களை மற்ற சாதி சங்கங்கள் பேரால் கொண்டாட ஏற்பாடுகள் செய்வோம்.

அவர்களை  மற்ற சாதி சங்கங்கள் கொண்டாடுவதுதான் அவர்களுக்கு பெருமை  சேர்ப்பதாக இருக்கும்.

சாதி ஒழிப்பில் இது ஒரு முக்கிய பரிமாணமாக அமையட்டும்.