ரசினிக்கு ஊக்க மருந்தும் விஜய்க்கு பேதி மருந்தும் தரும் வருமான வரித்துறை?!

vijay-rajinikanth

ரசினிக்கு விதிக்கப் பட்ட வரியை  கட்டத் தவறினாலும் அவர் மீது போடப்பட்ட மேன்முறையீட்டை வாபஸ் பெறுகிறது வருமான வரித்துறை.

சமீபத்தில் ரசினி தர்பார் படத்துக்கு நூறு கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கினார் என்று ஊடகங்கள் எழுதின.  அதை சரிபார்த்து நடவடிக்கை எடுக்க வரித்துறை தயாராக இல்லை.

அவர்தான் பாஜக அரசுக்கு ஆதரவாக  வாய்ஸ் கொடுத்து விட்டாரே?

எதற்கும் மாட்ட மாட்டேன், காவி சாயம் பூச மாட்டேன் என்று விரதம் இருந்து வந்த சைவ கொக்கு எந்த கெண்டை மீனைக் கண்டு விரதத்தை  கைவிட்டது என்பது  தெரியத்தானே போகிறது. 

அடுத்து அரசியலில் நுழையப் போகிறேன் என்பவர் வந்து எந்த சட்டையைப் போடப் போகிறார் என்பது தெரிந்து விட்டது. எனவே அவருக்கு சலுகைகள் தாராளம் நிச்சயம்.

ஆனால் விஜய் காவி சாயம் பூச மாட்டார். முன்பே அவரை ஜோசப் விஜய் என்று முத்திரை குத்தி எச் ராஜா கறை படுத்த முயல ஆமாம் நான் ஜோசப்தான் என்று விஜய் பதிலடி கொடுக்க வெளுத்துப் போனது பாஜகவின் சாயம்.

விஜய் ரசினிக்கு போட்டியாக வரக்கூடும் என்று பாஜக அச்சப் படலாம். அவர் எதிர் முனைக்கு போய் விடாமல் தடுக்க நினைத்துதான் அவர் மீது  திடீர் என்று பாய்ந்து மிரட்டுகிறது வருமான வரித்துறை என்றுதான் அவரது ரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

ஏனென்றால் படப்பிடிப்பில் இருந்தவரை அறிவிப்பு கொடுக்காமல் 20  மணி நேரம் தனியே அழைத்து சென்று விசாரிக்க வேண்டிய அளவு கொடிய குற்றத்தை விஜய் செய்து விட்டார் என்பதை அவரது ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

வரி கட்டி விட்டால் குற்றம் எல்லாம் மன்னிக்கப் பட்டு விடும் என்பதுதானே இன்றைய கொள்கையாக  இருக்கிறது. அதற்கு ஏன் இத்தனை கெடுபிடி?!

தெரியாமல் செய்பவர்களை தடுக்கலாம். தெரிந்தே செய்பவர்களை?!

பார்க்கலாம் பேதி மருந்து  வேலை செய்கிறதா ஊக்க மருந்து வேலை செய்கிறதா என்பதை?