ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தியதாக ஆ ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்ட 19 பேரின் மீதான மூன்று வழக்குகளிலும் சி பி ஐ தனி நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்தது.
வழக்கமாக ஒரு வழக்கில் விசாரணைக்கு முன்பே தண்டிக்கப் படுவது இதிலும் நடந்திருக்கிறது. ராசா ஒரு வருடமும் கனிமொழி ஆறு மாதங்களும் சிறையில் இருந்திருக்கிறார்கள். இன்று அவர்கள் நிரபராதிகள் என்று தீர்ப்பு. அனுபவித்த தண்டனைக்கு என்ன ஈடு?
இதில் உச்சநீதிமன்றம் தலையிட்டு 122 உரிமங்களை ரத்து செய்ததுடன் கோடிக்கணக்கில் பலருக்கு அபராதமும் விதித்தது. போதிய விசாரணைக்கு இத்தகைய தண்டனையை உச்சநீதி மன்றம் தந்தது சரியா தவறா என்பதும் இன்று விவாதத்துக்கு உள்ளாகிறது.
இதில் ஆதாயம் அடைத்து பா ஜ க வும் அதி மு க வும் தான். தேர்தல் பிரசாரங்களில் 2G கொள்ளையர்கள் என்பதுதான் பிரச்சாரமாக இருந்தது. அது தி மு க வின் வெற்றி வாய்ப்பை தமிழகத்திலும் காங்கிரசுக்கு மற்ற மாநிலங்களிலும் பறித்தது.
பல வகைகளில் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. 1553 பக்க தீர்ப்பில் நீதிபதி ஓ பி சைனி தான் உரிய சாட்சி ஆவணங்களுக்காக ஏழு ஆண்டுகள் காத்திருந்ததாகவும் ஏமாற்றமே மிஞ்சியதாகவும் குறிப்பிட்டுள்ளார். சாட்சியங்களை அடிப்படையாக வைத்து ஆவணங்களை புறந்தள்ளி குற்றப் பத்திரிகை புனையப் பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரிகளின் மீது தீர்ப்பில் கூறப்பட்டுள்ள விமர்சனங்கள் கவலைக்குரியவை. இப்படியுமா இருப்பார்கள் அதிகாரிகள்?
கலைஞர் தொலைக்காட்சிக்கு தரப்பட்ட 200 கோடி ரூபாய் உரிமம் தொடர்புடைய ஊழல் என்று ஏன் ஒரு கேள்வி கூட எந்த சாட்சியிடமும் கேட்கப் படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
வெறும் முப்பதாயிரம் கோடிக்கு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து விட்டு அதற்கும் ஆவண அடிப்படை இல்லாமல் எப்படி குற்றபத்திரிகை தாக்கல் செய்யப் பட்டது?. அதுவும் உச்சநீதி மன்றத்தின் மேற்பார்வையில்.
மத்திய கணக்காயர் அறிக்கையில் ஆண்டுதோறும் பல துறைகளின் மீது இழப்பு ஏற்படுத்தியதாக அறிக்கை வெளியிடுவது ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கமான ஒன்று. அதை அடுத்து நிகழாமல் பார்த்து சரி செய்து கொள்ளட்டும் என்பதே எதிர்பார்ப்பு.
வரலாற்றில் கணக்காயர் அறிக்கையின் அடிப்படையில் குற்ற வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்ட ஒரே வழக்கு 2G அலைவரிசை வழக்குதான்.
அதிலும் ஆ ரா சா குற்றவாளியாக இருந்து கொண்டே தானும் ஒரு சாட்சியாக விசாரித்துக் கொண்டது வழக்கத்தில் இல்லாதது. பதினைந்து நாட்கள் அவரை குறுக்கு விசாரணை செய்தார்கள். என்னென்ன தவறுகள் அவர் செய்தார் என்பதை குறுக்கு விசாரணையில் நிரூபிக்க அரசு தரப்பு தவறி விட்டது. வழக்கமாக குற்றவாளிகள் தங்களை சாட்சியாக விசாரித்துக் கொள்வது இல்லை. அசைக்க முடியாத நம்பிக்கை தன்னிடம் இருந்ததால்தான் ராசா தன்னை சாட்சியாக விசாரித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
தங்களுக்குள் ஒரு குழுவை அமைத்துக் கொண்டு ஒரு சிலரிடம் இருந்த உரிமையை 122 பேருக்கு பிரித்துக் கொடுத்ததின் மூலம் அழைப்புக் கட்டணம் பாதியாக குறைந்தது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள்.
காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்டு இருந்தாலும் மோடி அரசு வந்தபின் தானே விசாரணை நடந்தது. ஏன் முறையாக நடத்தவில்லை ?
எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இது சி பி ஐ என்ற நிறுவனத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை பாதித்திருக்கிறது.
சி பி ஐ யோ அமலாக்கத் துறையோ மேன்முறையீடு செய்தாலும்கூட இனிமேல் குற்ற பத்திரிகையை மாற்ற முடியுமா என்ன?
அரசியல் அரங்க விளையாட்டுகளை கட்சிகள் செய்யலாம்.
அதற்கு அரசு நிறுவனங்கள் , குறிப்பாக சி பி ஐ , அமலாக்கத்துறை , வருமான வரித்துறை போன்றவை பகடைக் காய்களாக செயல் படுகின்றன என்ற குற்றச்சாட்டு வலுவாகி வருகிறது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.
This website uses cookies.