தமிழக அரசியல்

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த சங்கரமட விஜயேந்திரர் மன்னிப்புக் கேட்க வேண்டும் ???!! கோரிக்கை வலுக்கிறது!!!

Share

தமிழ் நீஷ பாஷை என்பது சங்கர மட கொள்கை.

அதனால்தான் பூஜை வேளையில் சங்கராச்சாரியார் நீச பாஷையில் பேச மாட்டார் என்று தமிழில் பேசாத தற்கு விளக்கம் தரப்பட்டது சந்திர சேகரேந்திரர் காலத்திலேயே.

தமிழில் குடமுழுக்கு நடத்த விட மாட்டார்கள்.

தமிழில் அர்ச்சனை செய்ய விட மாட்டார்கள்.

தமிழனை கர்ப்ப கிருகத்திற்குள் விட மாட்டார்கள்.

கும்பிடவும் காணிக்கை செலுத்தவும் மட்டுமே இவர்களுக்கு தமிழர்கள் வேண்டும்.

அதன் வழியில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது உட்கார்ந்தே இருந்தார்.       அவருக்கு மட்டும் சற்று உயரமாக ஒரு மேடை.   அவருக்கும் கீழே உள்ள இருக்கை களில் ஆளுநர் , சாலமன் பாப்பையா , எச் ராஜா போன்றோர் அமர்ந்திருந்தார்கள்.

அந்த விழாவே எச் ராஜாவின் தகப்பனார் தமிழ்-சமஸ்க்ரிதம் பொருள் கூறும் நூலை எழுதியதை வெளியிடும் விழா.    அதில் தனது தாய் மொழி சமஸ்க்ரிததிற்கு தான் செய்யும் தொண்டு என்று அதன் ஆசிரியர் ஹரிஹரன் குறிப்பிடுகிறார்.

விழா முடிவில் தேசிய கீதம் பாடும்போது விஜயேந்திரர் எல்லாரையும் போலவே எழுந்து நின்றார்.

அடப்பாவி ! தமிழ்த்தாயை அவமதிக்க எப்படி இவருக்கு மனம் வந்தது?    இந்தக் கேள்வி எல்லா தரப்பிலும் எழுப்பப் பட்டு கண்டனம்  தெரிவிக்கப் பட்டு வருகிறது.

எதிர்ப்பு கிளம்பியவுடன் கடவுள் வாழ்த்து பாடும்போது அவர் தியானத்தில் இருந்தார் என்றும் அப்போது எழுந்து நிற்பது வழக்கம் இல்லை என்றும் சங்கர மடம் விளக்கம் சொல்கிறது.

ஏன் தேசியகீதம் பாடிய போது த்யானத்தில் இல்லை என்ற கேள்விக்கு பதில் இல்லை.

அவை மரபு கருதி கூட தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற உணர்வு இல்லாமல் அவமரியாதை செய்திருக்கிறார் விஜயேந்திரர்.

1970  ல் கலைஞர் ஆட்சி காலத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது உரிய மரியாதை செலுத்த அரசாணை பிறப்பிக்கப் பட்டது.

தேசிய கீதம் பாடும் போது எழுந்து நிற்க வேண்டுமென்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டபோது பல திரை அரங்குகளில் தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்காத பலர் மீது தாக்குதல் நடத்தப்  பட்டது குறிப்பிடத் தக்கது.     மாற்றுத் திறனாளிகள் எழுந்து நிற்காத போது கூட தாக்கப் பட்டனர்.   இப்போது தேசிய கீதம் இசைப்பது திரை அரங்குகளின் விருப்பம் என்று தீர்ப்பு மாற்றப் பட்டது.

மன்னிப்புக் கேட்டு தனது தவறுக்கு வருந்தி தமிழ் சமுதாயத்திடம் விஜயேந்திரர் பரிகாரம் தேட வேண்டும்.

சமுதாய நல்லிணக்கம் கருதி யாவது விஜயேந்திரர் தகுந்த விளக்கம் தந்து மன்னிப்புக் கேட்டு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

மறுத்தால் அல்லது பிடிவாதமாக நாங்கள் அப்படித்தான் என்று நின்றால் தமிழ் சமுதாயம் தனது எதிர்ப்பை அற வழியில் , அவர் உணரும் வண்ணம், திருந்தும் வண்ணம் காட்ட தயாராக வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பு.

This website uses cookies.