தண்ணீர் பஞ்சம் சென்னையில் தலைவிரித்து ஆடுகிறது.
பத்தாயிரம் லாரிகள் தண்ணீர் கொண்டு வந்து கொட்டினாலும் மக்கள் தண்ணீருக்கு அலைகிறார்கள்.
அரசு என்ன செய்கிறது என்று உயர் நீதிமன்றம் கேட்கிறது. பதில்தான் கிடைக்கவில்லை.
புறநகர் பகுதிகளில் இருந்து தனியார் தண்ணீர் கொண்டுவரும்போது அரசால் ஏன் முடியவில்லை என்ற கேள்விக்கு விடை இல்லை.
ஒருவேளை தனியாரை ஊக்குவிக்க அரசு சும்மா இருக்கிறதா? பருவமழை வரட்டும் என்று பொறுமையாக காத்திருக்கிறது அரசு என்றால் அப்படி ஒரு அரசு எதற்கு என்ற கேள்வி எழுகிறதே?
எதுவும் செய்யாமல் இருப்பதற்கு அரசு எதற்கு? கேரள அரசு கொடுப்பதாக சொன்ன தண்ணீர் போதாது என்பதிருக்கட்டும். ஏன் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.? கொடுத்தால் தினமும் கொடுங்கள் இல்லாவிட்டால் வேண்டாம் என்பது என்ன கொள்கை? தினமும் கொடுங்கள் என்று இப்போது கடிதம் கொடுக்கப் போகிறார்களாம்.
சென்னையில் இருக்கும் நான்கு ஏரிகளும் முறைப்படி தூர் வாரப்பட்டிருந்தால் சென்னைக்கு தேவைப்படும் ஆண்டுக்கு 12 டிஎம்சி தண்ணீரும் அங்கிருந்தே கிடைத்திருக்கும் என்கிறார்கள். ஏன் தூர் வாரவில்லை என்பதற்கும் எந்த பதிலும் இல்லை.
2020ம் ஆண்டில் 21 பெரு நகரங்களில் தண்ணீர் இருக்காது என்று மத்திய நிதி ஆயோக் அமைப்பு அறிவிக்கிறது. அந்த நிலை இப்போதே துவங்க ஆரம்பித்து விட்டதா?
எப்படி இருந்தாலும் ஆளும் கட்சி தனது தோல்வியை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.