2,000/- கொடுப்பது லஞ்சமின்றி வேறென்ன?
தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கும் சுமார் அறுபது லட்சம் குடும்பங்களுக்கு ரூபாய் 2,000/- அவர்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் திட்டம் இன்று முதல்வரால் தொடங்கி வைக்கப் பட்டது.
மாதம் இரண்டாயிரம் ரூபாய் மட்டுமே சம்பாதிப்பவர்கள்
கான்க்ரீட் வீடுகளில் வசிக்காதவர்கள்
வருமான வரி செலுத்தாதவர்கள்
என்று சில விதிகளை வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் என பட்டியல் இடுவதற்கு வகுத்திருக்கிறார்கள் .
உண்மையிலேயே இன்று இருக்கும் விலைவாசி நிலைமையில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு என்று உதவித் துகை வழங்குவது நல்ல திட்டம்தான். வரவேற்க வேண்டியதுதான்.
ஆனால் நடப்பது என்ன? தகுதி இல்லாதவர்களுக்கு எல்லாம் உதவி வழங்குவது நியாயம்தானா? தகுதி படைத்தவர்களின் பட்டியலை நேர்மையாக பரிசீலித்து முடிவு செய்யும் முன்பே அவசரம் அவசரமாக இருக்கும் பட்டியலை கொண்டே அமுல் படுத்த முனைந்தால் அதற்கு லஞ்சம் என்று பெயர் சூட்டாமல் வேறு என்ன பெயர் சூட்டுவது?
அகில இந்திய ரீதியில் கணக்கு எடுத்ததில் நாடு முழுதும் சுமார் 27.6 கோடிப்பேர் வறுமைக் கோட்டுக்கு கீழே வசிப்பதாக தெரிகிறது. அதாவது அகில இந்திய சத விகிதம் 21.52 %. தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழே வசிப்பவர்கள் 11.28% பேர். தமிழ்நாடு அரசு சொல்லும் 60 லட்சம் குடும்பங்கள் இந்த கணக்கில் எப்படி வரும்? சுமார் 56.5 லட்சம் குடும்பங்கள் தான் தமிழகத்தில் இருப்பதாக சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அறுபது லட்சம் குடும்பங்கள் என்று எப்படி கணக்கிட்டார்கள் என்பது தெரியவில்லை.
திட்டத்தை நாம் எதிர்க்க வில்லை. தேர்தலை மனதில் வைத்து தகுதி இல்லாதவர்களுக்கு எல்லாம் அவசர அவசரமாக கொடுப்பதைத்தான் லஞ்சம் என்கிறோம்.
இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வரும் என்று தெரிந்தே இந்த அவசர நடவடிக்கை.
அறப்போர் இயக்கம் நீதிமன்றம் சென்றிருக்கிறது.
கிராமப் புறத்தில் ஒருநாளைக்கு ரூபாய் 32 ம் நகர்ப்புறத்தில் ரூபாய் 47ம் வறுமைக்கோடு வருவாயாக நிர்ணயிதிருக்கிரார்கள் .
அரிசி வாங்கும் குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்களை எல்லாம் இந்த வரையறைக்குள் அடக்கி விட முடியாது.
எப்படியாவது, வாக்குக்கு நேரடியாக பணம் கொடுப்பதை விட அரசு பணத்தை வாரியிறைத்து தாங்கள் கொடுப்பதாக ஒரு பிரமையை ஏற்படுத்த அதிமுக ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள்.
தமிழக வாக்காளர்களை ஏமாற்ற முடியாது.