தினமணி பத்திரிகையில் கவிப்பேரரசு வைரமுத்து ‘ தமிழை ஆண்டாள் ‘ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருந்தாராம்.
ஆண்டாளின் தமிழ் ஆளுமையை பல விதங்களில் போற்றி எழுதப் பட்ட கட்டுரையாம் அது.
எச் ராஜா , பா ஜ கவின் செயலாளர் வைரமுத்து தாசிக்குப் பிறந்தவன் , அவன் தலையை எடுக்க வேண்டும் என்று பேசி அது யு டுபில் செய்தியாக வந்த பிறகுதான் அவர் எழுதிய கட்டுரை வெளிச்சத்துக்கு வந்தது.
மத்தியில் ஆட்சி அதிகாரம் . மாநிலத்தில் அடிமைகள் ஆட்சி. எனவே எது வேண்டுமானாலும் பேசலாம் என்று தைரியம்.
கட்டுரையில் தவறு இருந்தால் மறுத்து கட்டுரை எழுதலாம். கண்டிக்கலாம். இத்தனைக்கும் தான் தனிப்பட்ட முறையில் ஆண்டாளை குறித்து எதுவும் கருத்து சொல்ல வில்லை என்றும் பல்கலைக்கழக கட்டுரையில் இருந்ததை எடுத்து குறிப்பிட்டதால் யார் மனதாவது புண் பட்டிருந்தால் அதற்காக வருந்துவதாகவும் செய்தி வெளியிட்டு விட்டார்.
கொடுமை என்னவென்றால் அதில் என்னதான் இருக்கிறது என்று தினமணி பத்திரிகையை வெப் சயிட்டில் பார்க்கப் போனால் அது எடுக்கப் பட்டிருந்தது. இருந்தால் தானே அதில் தவறு இருக்கிறதா என்று கருத்து சொல்ல முடியும்.? இவ்வளவுதானா தினமணியின் நடுநிலை?
அமெரிக்காவின் இந்தியானா பல்கலை கழக சுபாஷ் சந்திரா மாலிக் என்பவர் ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார். அதில் ஆண்டாள் தேவதாசி வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம் என்று குறிப்பு இருக்கிறதாம். அதாவது இறைவனுக்கு அர்ப்பணிக்கப் பட்ட வாழ்க்கை.
ஆண்டாள் பனிரெண்டு ஆழ்வார்களில் ஒரு பெண் ஆழ்வார். திருப்பாவை தந்தவர். மார்கழியில் அவரது பாடல் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் பாடப் படுகிறது.
எவரையும் நிந்திக்கிறவர் அல்ல வைரமுத்து. ஆண்டாளை நிந்திக்கும் நோக்கம் இருக்க எந்த காரணமும் இல்லை.
அதே நேரத்தில் சமணர்கள் இன்றும் தங்கள் குடும்பத்து பெண்களை துறவிகள் ஆக்குகிறார்கள். அதை பாக்கியமாக கருதுகிறார்கள்.
ஆந்திரா-தெலுங்கானா வில் எண்பதாயிரம் தேவதாசிகளும் அகில இந்திய அளவில் நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் பேரும் தேவதாசிகளாக இருப்பதாக தேசிய மனித உரிமை கமிஷன் சொல்கிறது. அதில் பெரும்பாலோனோர் தலித்துகள்.
ஒரு பக்கம் இறை தொண்டு ஆற்ற அர்ப்பணிக்கப் பட்டவர்கள். மறு பக்கம் விலை மாதர் வாழ்க்கை. இரண்டும் கடவுளின் பெயரால்.
எது எப்படி இருந்தாலும் எவரையும் புண் படுத்தும் நோக்கம் யாருக்கும் இருக்க கூடாது. அதற்காக வன்முறையை தூண்டும் வகையில் பேசுவது மிகவும் கண்டிக்கத் தக்கது.
வைரமுத்துவை கண்டிப்பவர்கள் எச் ராஜாவையும் கண்டிக்க வேண்டும் அல்லவா?
எல்லை மீறி பேசியது ராஜாதான். வன்முறைக்கு வித்திட்டிருக்கிறார் எச் ராஜா.
பொறுமை காத்து பெருமை சேர்க்க வேண்டிய கடமை தமிழர்களுக்கு இருக்கிறது.