மேட்டூரில் நீரில்லை என்று சொல்ல ஒரு முதலமைச்சர் எதற்கு? ஊழல் செய்யவா ஒரு குறுவை தொகுப்பு?

edapadi-palanisamy

மேட்டூர் அணையில்  39.5 அடி தண்ணீர் தான் இருக்கிறது.    90  அடி இருந்தால்தான்  ஜூன்    12  ல்  குறுவை சாகுபடிக்கு நீர் திறக்க முடியும் .  எனவே இந்த ஆண்டு குறுவைக்கு நீர் திறக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இதற்கு ஒரு முதல் அமைச்சர் எதற்கு?

இங்கே இல்லை நீர்.  கர்நாடகாவில் எவ்வளவு இருக்கிறது?   அதுதானே வழக்கு.

அதை அளவிடத்தான் ஒழுங்காற்றுக் குழு.  அதுவும்பத்து நாளைக்கு ஒருமுறை.

அதைப்பற்றியெல்லாம் முதலமைச்சர் அறிக்கையில் ஒரு வார்த்தை இல்லை.

கர்நாடக அணைகளில் இருக்கும் மொத்த தண்ணீர் எவ்வளவு?    ஏரிகளிலும் தடுப்பு அணைகளிலும் பதுக்கி வைக்கபட்டிருக்கும் நீர் எவ்வளவு?

அங்கே போதிய நீர் இல்லாத காலத்தில் இருக்கும்  நீரை எப்படி பகிர்ந்து கொள்வது ( distress sharing )  என்பதுதான் வழக்கின் சாரம்.

இருக்கும் காலத்தில் கழிவு நீரைப்போல் திறந்து விடுவதற்கு ஏன் இத்தனை போராட்டம்?

அதை தெரிந்து கொள்ள முதல்வர் எடுத்த நடவடிக்கை என்ன?

மேலாண்மை ஆணையம் உடனடியாக அமுலுக்கு வர மத்திய அரசை எப்படி இந்த அரசு வலியுறுத்தியது?

இதையெல்லாம் சொல்லாமல் குறுவை தொகுப்பை அறிவிக்கிறாரே முதல்வர்?

இந்த தொகுப்பு நடப்பு பருவ குறுவைக்கு பயன் படுமா முதல்வரே?

நான்கு மாதத்தில் முடிவடையும் ஒரு சாகுபடிக்கு உங்கள் அறிவிப்பு எப்படி பலன் தரும்?

ஆழ்குழாய் மூலம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மட்டுமே பலன் தரும் இந்த திட்டம் ஆளும் கட்சி காரர்களுக்கு மட்டுமே பயன் தரும்.

பயனாளிகளை தெரிந்தெடுக்க என்ன விதிமுறை?     வெளிப்படைத் தன்மை உண்டா?

குறுவை தொகுப்பு என்ற பெயரை மாற்றுங்கள்.

கொஞ்சம் நாணயம்  இருக்கட்டுமே?