திமுக காங்கிரஸ் கூட்டணி பதினேழு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ஒவ்வொரு முறை தேர்தலின் போதும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பிரச்னைகள் வரத்தான் செய்யும்.
அதை பேசித் தீர்த்துக் கொண்டதால்தான் இத்தனை வருடங்கள் கூட்டணி நீடித்தது.
எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் எல்லாம் கலந்ததுதான் கூட்டணி. தனிக் கட்சிகள் ஆயிற்றே!
ஆனால் உள்ளாட்சி சமயத்தில் மாவட்டங்களில் பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்று முடிவ உ செய்து தேர்தலை எதிர் கொண்ட பிறகு ஒரு மாநிலத் தலைவர் அடுத்த கட்சியின் தலைவரை குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டால் என்ன நடக்கும் என்பது அவருக்கு தெரியாதா.
கூட்டணி தர்மத்தை திமுக தலைமை மதிக்கவில்லை என்று குற்றம் சாட்டி விட்டு எப்படி தலைமையிடம் பேச முடியும்?
சோனியா இவரை டெல்லிக்கு அழைத்து கண்டிக்கும் வரை அழகிரி வருத்தம் தெரிவிக்கவில்லை. திரும்பி வந்ததும் ஒன்றுமே இல்லை என்கிறார். எல்லாம் தீர்ந்து விட்டது என்கிறார். நேற்றைய அறிக்கை நேற்றோடு போச்சு என்கிறார். இதெல்லாம் பொறுப்புள்ள ஒரு மாநில தலைவர் பேசும் பேச்சா?
ஆனாலும் துரைமுருகன் கொஞ்சம் அதிகமாக பேசி இருக்க வேண்டாம் என்று சிலர் கருத்து சொல்கிறார்கள். தொண்டர்களிடையே கசப்பு உணர்வு வளர்த்தால் அந்த கூட்டணி எப்படி உருப்படும்?
பிரிந்தால் யாருக்கு நட்டம் என்பதை விட யாருக்கு லாபம் என்றுதான் பார்க்க வேண்டும். நிச்சயமாக பாஜக அதிமுகவுக்குத்தான் லாபம். அதற்கு இருவரும் இடம் தராமல் நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தாலும் யார் மனதில் என்ன இருக்கிறது என்பதை தேர்தல் வரும்போதுதான் தெரிந்து கொள்ள முடியும்!