மிரட்டி நுழையப் பார்க்கும் அழகிரி! தப்புக் கணக்கு போடுகிறார்?!

alagiri-karunanithi
alagiri-karunanithi

திமுகவில் அனுமதித்தால் ஸ்டாலின் தலைமையை ஏற்க அழகிரி தயாராம் . கலைஞர் இருக்கும் வரை ஏதும் செய்யாமல் மறைந்த பின் கட்சியை காப்பாற்ற வருகிறேன் என்று வரும் அழகிரி செய்யும் காரியங்கள் நல்லதற்கல்ல. வெளியில் இருந்து கொண்டே இப்படி மிரட்டுகிறாரே, உள்ளே விட்டால்? அவரிடம் இருக்கும் அத்தனை பேரும் தி மு க வின் தொண்டர்கள் தான். எல்லாரும் அவர் திமுக வை விட்டு விலகினால்கூட நாங்கள் கூட போகமாட்டோம் என்பவர்கள்தான்.

செப்டம்பர் ஐந்தாம் தேதி அழகிரி கூட்டும் அமைதிப் பேரணி எந்த நோக்கத்திற்காக ? பதவி வேண்டாமாம். கட்சியில் அனுமதித்தால் போதுமாம். இன்று திமுக வில் கருப்பசாமி பாண்டியனும் , முல்லைவேந்தனும் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்திருக்கிறார்கள். கட்சியில் சேருவது என்றால் அதற்கு முறை இல்லையா? கடமை கண்ணியம் கட்டுப்பாடு எல்லாம் கட்சியில் நுழைபவர்களுக்கு வேண்டாமா? அதெல்லாம் தெரியாதவரா அழகிரி? கட்சியில் அனுமதிக்கும் முன்பே திமுக ட்ரஸ்ட்டில் ஸ்டாலின் மனைவிக்கும் மருமகனுக்கும் என்ன வேலை என்று கேட்கும் அழகிரி உள்ளே வரும் நோக்கம் எல்லாருக்கும் தெரியும்.

கட்டுச் சோற்றில் பூனையை சேர்த்துக் கட்டினால் என்ன ஆகும்? சோதனைகளை வெற்றிகரமாக சந்தித்து வரும் திமுக அடுத்த சோதனையையும் தாண்டி செல்லும் . எந்த அளவுகோளிலும் அடங்காத அழகிரி அதிக பட்சம் செய்யப் போவது துரோகம். அதை செய்யாதவர்கள் தான் குறைவு. ஏராளமான துரோகங்களை சந்தித்து தான் இன்று திமுக வலிவுடன் முன்னேறுகிறது. சேருவது வலிவு சேர்க்கத்தான் என்றால் யாரும் வரவேற்கத்தான் செய்வார்கள். அதுவே பலவீனமாக்கும் என்றால் ? எதையும் தாங்கும் வலிமை கொண்டு திமுக தலைமை இயங்கி வருகிற நேரத்தில் இதையும் தலைமை வலிவோடு எதிர்கொள்ளும் என்பதே தொண்டர்களின் எதிர்பார்ப்பு.