நீட், இந்தி பாட சேர்ப்பு, அஞ்சல் ரெயில்வே துறைகளில் இந்தி திணிப்பு போன்ற பல பிரச்னைகளில் திமுகவும் அதிமுகவும் கிட்டத்தட்ட ஒரே நிலைப்பாட்டை எடுத்து வருகின்றன.
திமுக கண்டித்தால் அதிமுக ஏற்க முடியாது என்று சொல்லும்.
தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜக வுக்கு அதிமுக அரசு எடுக்கும் நிலைப்பாடுகள் அவ்வளவு திருப்தியாக இல்லை போல் இருக்கிறது.
அதனால்தான் மிரட்ட தொடங்கி இருக்கிறார்கள்.
ஒபிஎஸ் அமித் ஷாவை சென்று சந்தித்திருக்கிறார்.
தமிழகத்தில் எப்படியாவது பாஜக வை குறைந்த பட்சம் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடிய கட்சியாக மாற்ற முடிவெடுத்து இருக்கிறதாம் பாஜக தலைமை.
நாட்டையே ஆண்டாலும் தமிழகத்தில் சீண்ட ஆளில்லை என்ற நிலையை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
எனவேதான் ஒபிஎஸ் சை அழைத்து அமித் ஷா நீங்கள் இப்படி நிலைப்பாடு எடுப்பது சரியில்லை. ஏன் வெளிப்படையாகவே பிரச்னைகள் அடிப்படையில் பாஜக வோடு அனுசரித்துப் போகக் கூடாது என்று கேட்டதாகவும் அதற்கு ஒபிஎஸ் சில சலுகைகளை கேட்டதாகவும் சொல்கிறார்கள்.
அதில் ஒன்று மகனுக்கு அமைச்சர் பதவி. தனக்கு முதல் அமைச்சர் பதவி. இரண்டும் பாஜக நினைத்தால் முடியும் என ஒபிஎஸ் நம்புகிறாராம்.
அருணாச்சல் பிரதேசத்தில் 33 சட்ட மன்ற உறுப்பினர்களோடு பீமா காண்டு முதல்வரை பாஜக வில் சேர்த்து ஆட்சியை தனதாக்கி கொண்டது பாஜக.
கோவாவில் காங்கிரஸ் உறுப்பினர்கள் 10 பேரை கூண்டோடு பாஜகவில் சேர்த்துக் கொண்டு அமைச்சரவையை உறுதிப்படுத்தியது பாஜக .
கர்நாடகத்தில் கட்சி தாவல் தடை சட்டத்தை கேலிக் கூத்தாக்கி கட்சி மாறுதலுக்கு புது வியாக்கியானம் கொடுத்து அவர்களை ராஜினாமா கடிதம் கொடுக்க செய்து தனக்கு பெரும்பான்மையை தேடிக்கொண்டு குமாரசாமி ஆட்சியை கவிழ்த்து தன் ஆட்சியை கொண்டு வந்து விட்டது பாஜக;
இப்படி நாடு முழுக்க கட்சி தாவல்களை ஊக்குவித்து பாஜக அரசுகளை நிறுவி வருகிறது.
அடுத்த இலக்கு ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என்கிறார்கள்.
எனவே தமிழகத்தில் ஒரு ஆறு பேரை நகர்த்தினால் பழனிசாமி அரசு கவிழ்ந்து விடும். தங்கள் நிலைப்பாடுகளை அதிமுக அரசு பின்பற்ற தவறினால் எந்த எல்லைக்கும் சென்று அதை செய்ய வைக்க பாஜக தயாராகி வருகிறது.
வரும் நாட்களில் ஒபிஎஸ் தமிழகத்தின் பீமா காண்டு ஆவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.