ஜெயலலிதா உடல்நிலை பற்றி பொய்ச்செய்தி வெளியிடுகிறதா தினத்தந்தி ??!!

லட்சக்கணக்கான    அதிமுக  தொண்டர்கள் நிர்வாகிகள்   கோவில் கோவிலாக ஏறி இறங்கிக் கொண்டு பலவிதமான பிரார்த்தனைகளை மேற்கொண்டு தங்கள் தலைவியின் உடல்நிலை சீராக வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையே வதந்திகள் ரெக்கை கட்டி பறக்கின்றன.      அதை தடுக்க முயலாத அரசு ஒரு தனி படையே உருவாக்கி வதந்தி பரப்புவோர் மீது வழக்குகளை போட்டு வருகிறது.

அப்போலோ மருத்துவமனை ஒரு  வாரமாக  அறிக்கை  ஏதும் வெளியிட்டதாக தெரியவில்லை.

நக்கீரன் மட்டும் அவர் ஏதோ செயற்கை சுவாசத்தில் இருப்பதாகவும் உணவு கூட திரவ ரூபத்தில் தொண்டைகுழாய் மூலம் செலுத்தப் படுவதாகவும் எழுதுகிறது.

அவரை சந்திக்கும் யாரும் நேரில் பார்க்க வில்லை.     தொற்று நோய் பரவக் கூடும் என்ற அச்சத்தில் எவரையும் நிர்வாகம் பார்க்க அனுமதிக்க வில்லை என தெரிகிறது.

ஒன்றை மட்டும் புரிஞ்சு கொள்ள முடிகிறது.     மருத்துவ மனை நிர்வாகம் லண்டன் சிங்கப்பூர்  ஏய்ம்ஸ் மருத்துவமனை என்று பல இடங்களில் இருந்தும்  புகழ் பெற்ற நிபுணர்களை வரவழைத்து அவரது சிகிச்சையை அக்கறையுடன் பார்த்துக் கொள்கிறது , போராடுகிறது.

ஆனால் தினத்தந்தியில் மட்டும் செயலலிதா மருத்துவர்களிடம் தண்ணீர் கேட்டு வாங்கி குடித்த தாகவும் சிறப்பான சிகிச்சை அளித்ததற்கு நன்றி தெரிவித்து கொண்டதாகவும் அவருக்கு திட  உணவாக வேக வைக்கப் பட்ட  ஆப்பிள் துண்டுகள் சாப்பிட கொடுக்கப் பட்டதாகவும் செய்தி வெளியிட்டிருக்கிறது.

அது உண்மையானால் தமிழகமே நிம்மதிப் பெருமூச்சு விடும்.      நிச்சயம் நல்லபடியாக மீண்டு எழுவார் என்று தொண்டர்களும்  தங்கள் பணிகளை தொடர்வார்கள்.

இடையே மூன்று தொண்டர்கள்  தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட கொடுமையும் நிகழ்ந்தது.

வதந்தி வழக்குகள் வரக்கூடாது.    தொண்டர்கள் தற்கொலை கூடாது. உண்மைச் செய்தி வரவேண்டும்.

தினத்தந்தி செய்தி உண்மையா பொய்யா என்பதை  ஏன் மருத்துவ மனை நிர்வாகம் தெளிவு படுத்தக் கூடாது?

மருத்துவ மனை நிர்வாகம் தெளிவு  படுத்தாத வரை தினத்தந்தி செய்தி உண்மையா பொய்யா என்ற கேள்வியும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.